குறைந்தபட்ச ஆதார விலையில்கொப்பரை தேங்காய் கொள்முதல்

நாமக்கல் மாவட்டத்தில்,  தென்னை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


நாமக்கல் மாவட்டத்தில்,  தென்னை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 35 ஆயிரத்து 621 ஹெக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் இருந்து லட்சக்கணக்கான தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய்களின் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்புக் கூட்டி கொப்பரை தேங்காய்களாக விற்பனை செய்கின்றனர்.
அண்மைக்காலமாக, கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாக உள்ளது. விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, தேங்காய் கொப்பரைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, 20 மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலம் 28 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை முனையத்தின் மூலம்  43 இடங்களிலும் தலா 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரை என இரண்டு வகைகளாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். மத்திய அரசினால் 2019- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.99.20 மற்றும் அரவைக் கொப்பரைக்கு ரூ.95.21 என்ற விலையைக் கொடுத்து  கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இப்பணி வரும் ஆறு மாதங்களுக்கு நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்,  5 ஆயிரம் மெட்ரிக் டன் பந்து கொப்பரையும், 45 ஆயிரம் மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதால், விவசாயிகள் சம்பந்தப்பட்ட மையத்தை அணுகி தங்களது பெயர்களை தற்போதே பதிவு செய்து கொள்ளலாம். பெயர்களை பதிவு செய்யும் போது, நிலச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.  கொள்முதலுக்கு பின், விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். கொப்பரை கொள்முதல் இலக்காக 750 மெட்ரிக் டன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com