கொல்லிமலையில் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த எம்.எல்.ஏ. கோரிக்கை
By DIN | Published On : 18th July 2019 04:56 AM | Last Updated : 18th July 2019 04:56 AM | அ+அ அ- |

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் நாட்டில் உள்ள நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்த, 3 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்கான நிலத்தை ஒதுக்கினால் நிகழாண்டிலேயே உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில், பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன், கொல்லிமலை ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, அரசு உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன், கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர், கல்வி பயிலுவதற்கு வசதியாக அரசு உயர்நிலைப் பள்ளியை கட்டாயம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றார். மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணியும் இதற்குப் பரிந்துரைத்தார். அதையடுத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியதன் அடிப்படையில், தரம் உயர்த்த பள்ளிக்கு போதிய இடம் தேவைப்படுகிறது. தற்போது அங்கு 61 சென்ட் இடம் மட்டுமே உள்ளது. ஆனால் 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
மலைப்பகுதி என்பதால் உடனடியாக இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் நிகழாண்டிலேயே ஆலத்தூர்நாடு பள்ளியைத் தரம் உயர்த்தி தருவதற்கு, முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். மேலும், கொல்லிமலையில் இருந்து கீழே பள்ளிக்கு வந்து விட்டு மீண்டும் மலைப்பகுதிக்குச் செல்வது கடினமான வேலை. பத்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளிகள் இல்லை என்பதால், உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.
மேலும், கொல்லிமலை சேலூர்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம், பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆரியூர், புதுவளவு, தெம்பளம் அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகக் கட்டடம் வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுக்க, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற இத்தகவலை, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் தெரிவித்தார்.