குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கோரி மனு
By DIN | Published On : 23rd July 2019 09:30 AM | Last Updated : 23rd July 2019 09:30 AM | அ+அ அ- |

குழந்தையின் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவிடக் கோரி, இளம் தம்பதியர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கரட்டுப்பாளையம் சிலோன் காலனியைச் சேர்ந்த பி.மணிகண்டன் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: கட்டுமானத் தொழில் செய்து வரும் எனக்கு மனைவி மற்றும் கனிஷ் (2) என்ற மகன் உள்ளான். பிறந்து எட்டு மாதங்களானபோது, குழந்தைக்கு இதய நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பல ஆயிரம் செலவழித்து சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தேன். அறுவை சிகிச்சை தேவையில்லை, மருந்து, மாத்திரையில் குணப்படுத்தி விடலாம் என அங்கு நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்க போதிய பொருளாதார வசதியில்லாததால், மீண்டும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், தனியார் மருத்துவமனையில் பின்பற்றிய மருந்து, மாத்திரைகளையே பயன்படுத்த வேண்டும். அதை வெளியில் தான் வாங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருந்துகள் வாங்க மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் செலவாகிறது. கட்டட வேலை செய்யும் என்னால் குழந்தைக்கு தேவையான மருத்துவ வசதியை செய்து கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே, எனது மகனை காப்பாற்ற மருத்துவ நிதியுதவி செய்யும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.