கொல்லிமலையில் நிகழாண்டில் மிளகு விளைச்சல் அதிகரிக்குமா?

கடந்த ஆண்டு மழையில்லாததால், மிளகு காய் பிடிக்கும் பருவம் தவறி போனது. நிகழாண்டில் பெய்த ஓரளவு மழையால், கொல்லிமலையில் மிளகு கொடிகளில் பூக்கள் விட்டு காய் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது.
கொல்லிமலையில் நிகழாண்டில் மிளகு விளைச்சல் அதிகரிக்குமா?

கடந்த ஆண்டு மழையில்லாததால், மிளகு காய் பிடிக்கும் பருவம் தவறி போனது. நிகழாண்டில் பெய்த ஓரளவு மழையால், கொல்லிமலையில் மிளகு கொடிகளில் பூக்கள் விட்டு காய் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது.
 நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேசமான கொல்லிமலையில் மா, பலா, வாழை, அன்னாசி உள்ளிட்ட பழ வகைகளும், மிளகு, காப்பி ஆகியன அதிகம் பயிரிடப்படுகின்றன. உதகை, கொடைக்கானல், ஏற்காட்டில் மிளகு விளைந்தபோதும், காரத்தன்மை அதிகம் கொண்ட கொல்லிமலை மிளகையே பலரும் விரும்புவர். 280 சதுர கிலோமீட்டர் கொண்ட இம்மலைப் பகுதியில், சுமார் 2,500 ஏக்கரில் மிளகு பயிரிடப்பட்டுள்ளது.
 மிளகு ஒரு ஊடு பயிராகும். ஒரு ஏக்கரில் 700 சில்வர்வோக் மரங்களை நடச் செய்து, அதனருகில் மிளகுச் செடியை பயிரிடுவர். அந்த மரத்தின் நிழலில் வளர்வதோடு, மரங்களின் மீது படர்ந்து செடி காணப்படும். இதற்கான பூப்பிடிக்கும் பருவம் என்பது ஜூன், ஜூலை. அந்தப் பூக்கள் சிகப்பு பழமாக உருவெடுத்து, அதன்பின் காயாக வளர சுமார் 8 மாதங்களாகும். அறுவடை மார்ச் மாதத்தில் நடைபெறும்.
 கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால், மிளகு விளைச்சல் சரிவர இல்லை. பூக்கள் பிடித்தபோதும் தண்ணீர் இல்லாததால், அவை கருகின. நிகழாண்டில் பெய்த ஓரளவு மழையால் பூக்கள் பிடித்திருப்பதைக் கண்டு மிளகு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 தமிழ்நாடு பழங்குடியின மலையாளி நல அமைப்பின் மாநிலத் தலைவர் கே.குப்புசாமி கூறுகையில், கொல்லிமலையில், வாழவந்திநாடு, தின்னூர் நாடு, எடப்புளிநாடு, வயல்நாடு, தேவனூர்நாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகு அதிகளவில் பயிரிடப்படுகிறது.
 ஒரு மிளகு செடியைப் பயிரிட்டு அது முழுமையாக வளர 3 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பின், போதிய மழை இருந்தால், ஆண்டுதோறும் விளைச்சல் கிடைக்கும். மரத்தின் மீது ஏறி மிளகை பறித்து, அதை நன்கு காயவைத்து அதன்பின் விற்பனைக்கு அனுப்புவர்.
 காரத்தன்மை அதிகம் கொண்டது கொல்லிமலை மிளகு என பெயர் இருப்பதால், அவற்றை வாங்கிச் செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மிளகு மட்டுமின்றி, அதன் பிடி கொண்ட காம்புகளையும் காயவைத்து இயந்திரத்தில் அரைத்து மிளகு தூளாக பயன்படுத்துகின்றனர். தற்போதைய சூழலில் விலை சற்று குறைந்துள்ளது என்றார்.
 கொல்லிமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,400 ஹெக்டேர் பரப்பில் மிளகு ஊடு பயிராக பயிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த மழையால் மிளகு கொடிகளில் பூக்கள் விட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மாதத்தில் அவற்றை அறுவடை செய்வர்.
 சோளக்காட்டில் உள்ள சந்தையில் மிளகு மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனையாகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகள் வந்து மிளகை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com