வல்வில் ஓரி விழா: ஆகஸ்ட் 3-இல் உள்ளுர் விடுமுறை
By DIN | Published On : 30th July 2019 09:32 AM | Last Updated : 30th July 2019 09:32 AM | அ+அ அ- |

கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 3) உள்ளுர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில், அரசு சார்பில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி மற்றும் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக. 2, 3) வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவின் போது, அரசின் பல்துறை பணிவிளக்கக் கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்விழாவுக்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வரவேண்டும் என்பதால், ஆக. 3-ஆம் தேதியன்று, மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு அரசு விடுமுறை நாளில் பணிபுரிய தேவையில்லை எனவும் இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விடுமுறை நாளான 3-ஆம் தேதியன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. வல்வில் ஓரி விழாவில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.