சேதமடைந்த தடுப்புச் சுவர் சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

கொல்லிமலை மலைப் பாதையில் விபத்துகளால் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைக்கும் பணி நடைபெற்று

கொல்லிமலை மலைப் பாதையில் விபத்துகளால் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். விபத்தை தவிர்ப்பதற்காக மலைப்பாதை முழுவதும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிவேகத்தில் வரும் வாகனங்கள் சுவரை இடித்துக் கொண்டு பள்ளத்தில் விழும் அபாயகரமான சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அண்மையில், கொல்லிமலைக்கு சென்று விட்டு திரும்பிய வேன் 33-ஆவது கொண்டை ஊசி வளைவின் தடுப்புச் சுவரை தகர்த்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதேபோல், மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு தடுப்புச் சுவர்கள் சேதமடைகின்றன. இவற்றை சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
சில தினங்களுக்கு முன், கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது, 42-ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவர் மற்றும் சாலை சேதமடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப்  பிரிவு தலைமை பொறியாளர் சாந்தி, சீரமைப்புப் பணி நடைபெறும் மலைப்பாதையில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். சாலை மற்றும் தடுப்புச் சுவரின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த அவர், சாலைப் பணிகள்  தரமானதாக இருக்க வேண்டும், மழைக் காலமாக இருப்பதால் எந்த நேரத்திலும் சரிவு ஏற்படலாம், அதனால் கட்டுமானம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் விஜயா, கோட்டப் பொறியாளர் சசிகுமார், சேந்தமங்கலம் உதவி கோட்டப் பொறியாளர் செல்வராஜன், பொறியாளர் குமரேசன் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com