ஜூன் 25-இல் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றும் முகாம்

நாமக்கல் மின் கோட்ட அலுவலகங்களில் வரும் 25 - ஆம் தேதி மின்சார இணைப்புகளை பெயர் மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் மின் கோட்ட அலுவலகங்களில் வரும் 25 - ஆம் தேதி மின்சார இணைப்புகளை பெயர் மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து  நாமக்கல் மின் பகிர்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளர் சி.சந்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாமக்கல் மின்பகிர்மான வட்டம் சார்பில்,  நாமக்கல்,  பரமத்திவேலூர்,  திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய நான்கு கோட்டங்களிலும் மின் இணைப்பு பெயர் மாற்றும்  முகாம் வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பல தாழ்வழுத்த மின் இணைப்புகள்  தற்போதைய கட்டட மற்றும் விவசாயக் கிணறுகளின் உரிமையாளர்கள் பெயரில் மாற்றம் செய்யப்படாமல் பழைய உரிமையாளர்களின் பெயர்களிலேயே உள்ளன.
அவ்வாறான மின் இணைப்புகளை தற்போதைய உரிமையாளர்கள் பெயருக்கு மாற்றுவதற்காகவே இந்த சிறப்பு முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், மின் இணைப்புகளின் தற்போதைய உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதற்குரிய ஆவணம், உரிய தொகையை செலுத்த வேண்டும். விவசாய மின் இணைப்பாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். குடிசை மின் இணைப்பாக இருந்தால் ரூ.50, குடிசை அல்லாத வீடுகளுக்கு ரூ.200 வீதம் செலுத்த
வேண்டும்.
மின் இணைப்பு உரிமையாளர் இறக்க நேரிட்டிருந்தால், முந்தைய உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட வாரிசுச் சான்று அல்லது மின் இணைப்பு உரிமையை நிரூபிக்கும்படியான இனங்களின் வரி கட்டிய ரசீது, இதர வாரிசுத்தாரர்கள் இருப்பின் அவர்களது சம்மதக் கடிதம், மற்றவர்களது பெயரில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில், மின் இணைப்பு உரிமையாளர் சம்மதக் கடிதம், உறுதி மொழியுடன் கூடிய பெயர் மாற்றத்திற்கு உதவும் ஆவணங்கள், கூட்டு உரிமையாளர்களின் சம்மதக் கடிதம், காப்புத்தொகையை மாற்றிக் கொள்ள மின் இணைப்பு உரிமையாளர் சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பதாரர் புதிதாக காப்புத்தொகை செலுத்த வேண்டும்.
குறிப்பாக, மின் துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படமாட்டாது. இந்த பெயர் மாற்றத்திற்கான படிவங்கள், செயற்பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.  ஒரு நாள் மட்டும் நடைபெறும் இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com