மக்காச்சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு: கோழிகளுக்கு தீவனமாக அளிக்க பிகாரில் இருந்து 12,500 டன் கொள்முதல்

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில்  போதிய விளைச்சல் இல்லாததால்,  கோழிகளுக்கு தீவனமாக அளிக்கப்படும் மக்காச் சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில்  போதிய விளைச்சல் இல்லாததால்,  கோழிகளுக்கு தீவனமாக அளிக்கப்படும் மக்காச் சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து,  பிகார் மாநிலத்தில் இருந்து 12,500 டன் அளவுக்கு  மக்காச் சோளத்தையும்,  மத்தியப் பிரதேசத்தில் இருந்து 5 ஆயிரம் டன் கோதுமையையும் நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணையாளர்கள் கொள்முதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் முட்டை கேந்திரமான நாமக்கல் மாவட்டத்தில், 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன.  இங்கு, 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
முட்டைகளின் தேவை அதிகரிப்பு: கடந்த இரு மாதங்களாக முட்டையின் விலை சரிவடைந்த நிலையில்,  தற்போது முட்டையின் தேவையானது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கோழிகளைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பண்ணையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  கோழிகளுக்கான தீவனம் என்பது,  மக்காச்சோளம், கடுகு பிண்ணாக்கு,  கோதுமை, கருவாடு உள்ளிட்டவை.  இவற்றை பண்ணைகளில் அதற்கென உள்ள இயந்திரத்தில் மாவு போல் அரைத்து தீவனமாக அளிப்பர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், ஆந்திரம், கர்நாடகத்தில் விளைந்த மக்காச் சோளத்தை பண்ணையாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து லாரிகளில் கொண்டு வந்தனர். தற்போது,  இரு மாநிலங்களிலும் வறட்சியால்,  தேவையான மக்காச்சோளத்தை நாமக்கல் கோழிப் பண்ணையாளர்களால் கொள்முதல் செய்ய முடியவில்லை.
கூட்டுறவுச் சங்கம் வாயிலாக கொள்முதல்:
கருவாடு, கடுகு பிண்ணாக்கு போன்றவை கிடைக்காததும், விலை அதிகரிப்பும் பண்ணையாளர்களை நெருக்கடியில் தள்ளியது.  அதிக கோழிகள் வளர்க்கும் பண்ணையாளர்கள் தங்களுக்கென உள்ள இடைத்தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தீவனத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு முட்டைப் பண்ணைக் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும் முடிவை மேற்கொண்டனர்.  அதன்படி,  90 பண்ணையாளர்கள் இணைந்து பிகார் மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் 12,500 டன்னும்,  மத்தியப் பிரதேசத்தில் இருந்து  5 ஆயிரம் டன் கோதுமையும் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலைப் பெற்றனர். இதில், சில நாள்களுக்கு முன் கோதுமை  சரக்கு ரயில் மூலமாக நாமக்கல்லுக்கு வந்து விட்டது.   மக்காச்சோளம் செவ்வாய்க்கிழமை காலை சரக்கு ரயிலில் 50-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்தது.  அவை லாரிகள் மூலமாக முன்பதிவு செய்த பண்ணையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 100,  200 மூட்டைகள் என பிரித்து அனுப்பப்பட்டன.  இதுவரை 5 ஆயிரம் டன் வரை வந்துள்ளது. மேலும், 7,500 டன் வியாழக்கிழமை வரும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
பண்ணைகளை நடத்துவது சிரமம்தான்:
இதுகுறித்து, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம்.என்.மோகன் கூறியது;-
கோழிகளுக்கான தீவன விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மக்காச்சோளம்,  கோதுமை உள்ளிட்டவற்றை அளித்தால்தான் உற்பத்தியைப் பெருக்க முடியும். இவற்றில் மக்காச் சோளம் முக்கிய தீவனமாகும்.  இவை மட்டும் ஆயிரம் கோழிகளுக்கு 2 மாதங்களுக்கு 600 மூட்டைகள்  தேவைப்படும். 
பிகாரில் இருந்து 12,500 டன் மக்காச் சோளத்தை கொள்முதல் செய்துள்ளோம்.  இது, எங்களது உறுப்பினர்கள் 90 பேரின் பண்ணைகளில் உள்ள 3.50 கோடி கோழிகளை கணக்கிட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக 2 மாதம் வரை மட்டுமே அவை இருப்பில் இருக்கும்.   அதன்பின்னர், மீண்டும் கொள்முதல் செய்ய வேண்டியது வரும். தற்போதைய சூழலில் பண்ணைகளை நடத்துவது மிகவும் சிரமமான காரியம்.  ஒரு மூட்டை தீவனம் கடந்த ஆண்டு ரூ.1,400-ஆக இருந்தது.  இந்த ஆண்டு ரூ.2,500 -ஆக உயர்ந்துள்ளது.  ஒரு முட்டை உற்பத்திக்கு ரூ.2 வரை செலவாகிறது.  அதன்பின்னர், வாகனச் செலவு, ஓட்டுநர் சம்பளம் என போனால் சொற்ப காசுகள் தான் லாபமாக கிடைக்கும்.  கோழிப் பண்ணைகளின் முன்னேற்றத்துக்கு தேவையான வசதி,  வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com