12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 22,097 மாணவ, மாணவியர் எழுதினர்: 1,039 பேர் பங்கேற்கவில்லை
By DIN | Published On : 02nd March 2019 08:46 AM | Last Updated : 02nd March 2019 08:46 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை தொடங்கிய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை, 22,097 மாணவ, மாணவியர் எழுதினர். 1,039 பேர் பங்கேற்கவில்லை.
தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 201 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 11,302 மாணவர்களும், 11,834 மாணவியரும், 496 தனித் தேர்வர்களும் இத் தேர்வை எழுத 84 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தேர்வெழுத வந்த மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு முறை குறித்து விளக்கம் அளித்தனர். காலை இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு மாணவ, மாணவியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றனர்.
காலை 10 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 22,097 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 1,039 பேர் பங்கேற்கவில்லை. அனைத்து மையங்களிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும், 86 துறை அலுவலர்கள், 300 பறக்கும் படையினர், 1,300 அறை கண்காணிப்பாளர்கள் மொத்தம் உள்ள 84 மையங்களிலும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். காப்பி அடித்ததாக யாரும் பிடிபடவில்லை. தேர்வையொட்டி, ஒவ்வொரு மையம் முன்பாகவும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.