மீண்டும் நெகிழியின் வரவால் வாழை இலை விற்பனை சரிவு
By DIN | Published On : 02nd March 2019 08:50 AM | Last Updated : 02nd March 2019 08:50 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெகிழி பைகளின் வரவு மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் வாழை இலை விற்பனை சரிவடைந்துள்ளதாக வாழை இலை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழக அரசு கடந்த மாதம் நெகிழி தொடர்பான பல்வேறு வகையான பொருள்களுக்கு தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உணவகங்கள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடை, துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் நெகிழ் பைகள் உள்ளிட்ட பொருள்களை தவிர்த்து வாழை இலை, தடுக்கு, காகித பைகளைப் பயன்படுத்தி வந்தனர். மேலும், கடைகளின் முன்பு இங்கு நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதில்லை என்றும், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக பாத்திரங்கள், துணிப்பைகள் கொண்டு வர வேண்டும் என எழுதி
வைத்திருந்தனர்.
ஆனால், தமிழக அரசின் ஆணையை பின்பற்றாததால், மீண்டும் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நெகிழிப் பொருள்களின் தடையால் ஒரு கட்டு வாழை இலை (100 இலைகள் கொண்டது) ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. சாப்பாட்டு இலை ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரையிலும், சிற்றுண்டி மற்றும் இறைச்சி கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வாழை இலை ரூ.1.50 முதல் ரூ.3 வரை விற்பனையானது. ஆனால், தற்போது மீண்டும் நெகிழி பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு வாழை இலை (100 இலைகள் கொண்டது) ரூ.300
முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. சாப்பாட்டு இலை ஒன்று ரூ.3 முதல் ரூ.4 வரையிலும், சிற்றுண்டி மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வாழை இலை ரூ.1 முதல் ரூ.1.50 வரை விற்பனையாகிறது.
இதனால் வாழை இலை விற்பனையாளர்கள் மற்றும் வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு நெகிழிப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.