ரூ.3.81 கோடியில் பண்ணை இயந்திரம்: 68 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ், 68 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ், 68 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, ரூ.3.81 கோடியில் பண்ணை இயந்திரம், வேளாண் கருவிகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட சிறு, குறு விவசாயிகள், பயிர் சாகுபடியை லாபகரமாக மேற்கொண்டு, வருமானத்தை உயர்த்திக் கொள்ளும் விதமாக, கடந்த ஆண்டு முதல் கூட்டுப்பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம அளவில் 20 விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.  பின்னர், 5 குழுக்கள் இணைந்து 100 விவசாயிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் குழுவாக மாற்றப்படும். 
இத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம், கடந்த ஆண்டில் 56 குழுக்கள் அமைக்கப்பட்டன. அக் குழுக்களுக்கு ரூ.324.10 லட்சம் மதிப்பில் 194 பண்ணை இயந்திரம் மற்றும் வேளாண் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டன.
அந்த கருவிகள், வருடாந்திர குத்தகையாக ரூ.26.36 லட்சத்திற்கு உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு விடப்பட்டன.  அந்த குத்தகைத் தொகை, வேளாண் இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கும், பண்ணைக் கருவிகளைப் பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 
நடப்பு சித்திரை பட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டாக பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  2018--19-ஆம் ஆண்டுக்கு வேளாண்மைத் துறை சார்பில் 44 குழுக்கள், தோட்டக்கலை துறை சார்பில் 24 குழுக்கள் என மொத்தம் 68 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  குழுக்களின் தேவைக்கு ஏற்ப   ரூ.3.81 கோடி மதிப்பில், 355 பண்ணை இயந்திரங்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 
      மேலும், அரசு வழங்கும் தொகுப்பு நிதியாக ரூ.3.40 கோடி மானியமாக உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அண்மையில், நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கூட்டுப் பண்ணையக் குழு விவசாயிகளுக்கு பண்ணை மற்றும் வேளாண்மை இயந்திரங்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.  அப்போது, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் மருத்துவர்.வெ.சரோஜா, மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியர்   மு.ஆசியா மரியம்,  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர்,  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி,  வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர், தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com