சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்திட வழக்குரைஞர் கூட்டமைப்பு கோரிக்கை
By DIN | Published On : 04th March 2019 09:09 AM | Last Updated : 04th March 2019 09:09 AM | அ+அ அ- |

வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதியை, ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அக் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவராக எஸ்.கே.வேல், செயலாளராக எல்.ராஜூ, பொருளாளராக கே.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அனைத்து மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு இரங்கலும், பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞர் அலுவலகங்களுக்கு வணிகரீதியான மின் கட்டணம் பொருந்தாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
வழக்குரைஞர்கள் சேமநல நிதியை, ரூ.5.25 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக தமிழக முதல்வர் உயர்த்தினார். அதை, ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு முன்வரவேண்டும். வீட்டு மனைகளை சலுகை விலையில் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் கீழமை வழக்குரைஞர் சங்கங்களின் செயல்பாடுகளிலும், அதன் தேர்தல்களிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட வேண்டாம். சிவில் வழக்குகளில் காவல் துறையினர் தலையிடக் கூடாது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில், கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும், வழக்காடும் தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களை தேர்வு செய்யும் வகையில், சட்ட திருத்தம் செய்து, வழக்குரைஞர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் புதுச்சேரி அரசு போல், தமிழக அரசும் வழங்க வேண்டும்.