தேர்தல்: ஒலிபெருக்கி தடையால் நாடகக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

 மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம்,  மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.  இரவு 10 மணிக்கு மேல்


 மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம்,  மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.  இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்ற தடையை விலக்க வேண்டும் என அக் கலைஞர்கள் அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்தினர்.
தமிழகத்தில் மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில், பெரும்பாலான கிராமப்புறங்களில் கோயில் திருவிழா களைகட்டும்.  ஆட்டம்,  பாட்டத்துடன், இரவில் சரித்திர நாடகங்களான சத்தியவான் சாவித்திரி, ஹரிச்சந்திரா, சீதா ராமர் கல்யாணம், பொன்னர் சங்கர் மட்டுமின்றி பல்வேறு சமூக சீர்திருத்த நாடகங்களும் நடத்தப்படும். இதற்கென தொழில்முறை இயக்குநர்கள், நடிகர்கள், இசைக் குழுவினர் என மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.  அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால்,  திருவிழா நடைபெறும் இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் இவற்றை கண்காணித்து வருகின்றனர்.  ஒவ்வோர் ஆண்டும், மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மட்டுமே நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருக்கும்.
தினமும், ஏதாவது ஒரு பகுதியில் மேடை நாடகத்தை நடத்தி, ஆயிரம், ரூ.2 ஆயிரம் என வருமானம் ஈட்டுவர்.  தற்போதைய ஒலி பெருக்கித் தடையால் மேடை நாடகத்தை முன்பதிவு செய்வதில் திருவிழாக் குழுவினர் ஆர்வம் காட்டுவதில்லை.  இவர்கள் மட்டுமின்றி,  கரகம் ஆடும் கலைஞர்களுக்கும் இரவு நேர நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  நாடகத்தை நம்பியுள்ள கலைஞர்கள் பலர், வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடி மேடை நாடகம் நடத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என மனு அளித்தனர். நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், தமிழக தொழில்முறை நாடக இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.வானதிகதிர் கூறியது;  ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் மட்டுமே, எங்களுடைய தொழில் நல்லமுறையில் இருக்கும்.  அப்போது கிடைக்கும் வருவாய் ஓராண்டு வரை தாக்குப் பிடிக்கும். மக்களவைத் தேர்தல் அறிவிப்பால், இரவு 10 மணிக்கு மேல் நாடகம் நடத்துவதற்கு போலீஸார் தடை விதிக்கின்றனர்.  ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்கின்றனர்.  தமிழகம் முழுவதும் எங்கள் தொழில் சார்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.  திருவிழாக்களில் நடைபெறும் மேடை நாடகங்களை கிராமப்புற மக்கள் ஏராளமானோர் பார்த்து ரசிப்பர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம்.  அவர்,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்கிறார்.  தமிழக தேர்தல் ஆணையத்திடமும் நேரடியாகச் சென்று முறையிட உள்ளோர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com