மக்களவைத் தேர்தல்: புகார் தெரிவிக்க செயலி அறிமுகம்

மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை


மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது தொடர்பாக, தேர்தல் பணி அலுவலர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் எவ்வித தடையுமின்றி அமைதியாக நடைபெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் பணிகளை தாமதமின்றி உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில், தேர்தல் ஆணைய இணையதளம் மற்றும் செல்லிடப்பேசியின் செயலிகளை பயன்படுத்துவது குறித்த தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
ஆட்சியர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நடத்துவதற்காகவும், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், பிரசார வாகனப் பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கான அனுமதியைப் பெறவும் ஒற்றை சாளர முறையில் சுவிதா என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இணையதளத்தில் அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் மற்றும் துறை அலுவலர்கள் பரிசீலனை செய்து அதற்கான அனுமதியினை அந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தினை, இதே இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை தெரிவிக்க ஸ்மார்ட்போன் செயலியினையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் செயலியை தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து தங்களது செல்லிடப்பேசியில் (ஸ்மார்ட் போன்) வைத்துக் கொள்ளலாம். தேர்தல் விதிமுறைகள் குறித்து தாங்கள் ஏதேனும் விதிமீறல்களை பார்வையிட்டால் அதனை செயலியில்  புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்ய அதற்கான பொத்தானை அழுத்தும் போது நடைபெறும் நிகழ்வு நேரடியாக பதிவு செய்வதுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இப் புகாரானது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு குழுவினருக்கு புகார் தெரிவித்த இடத்தின் முழு  விவரத்தோடு வந்து சேரும். அந்த புகாரானது சம்மந்தப்பட்ட பகுதியின் பறக்கும் படையினருக்குத் தெரிவிக்கப்படும்.
அவர்கள்,  உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வர். தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர், தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரின் மேற்பார்வையிலேயே இச்செயலி கண்காணிக்கப்பட உள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்யும்போதே தங்களது செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு அதற்குரிய தீர்வானது செல்லிடப்பேசியிலேயே வந்து சேரும் என்றார் ஆட்சியர்.
இப்பயிற்சி வகுப்பில், தேசிய தகவல் மைய அலுவலர் து. செல்வகுமார், தேர்தல் கணினி அலுவலர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், நாமக்கல் சார் ஆட்சியர் சு. கிராந்தி குமார் பதி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com