வழிபாட்டுத் தலங்களில் பிரசாரத்துக்குத் தடை

கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களில் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளில் கூறியிருப்பது;  ஜாதி, மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளை உண்டாக்கும் வகையில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ ஈடுபடக் கூடாது.  பிற கட்சிகள் மீது விமர்சனம் வைக்கும்போது,  அக் கட்சிகளின் கொள்கைகள்,  செயல் திட்டங்கள், கடந்த காலச் செயல்பாடுகள்,  நடவடிக்கைகள் தொடர்பாகவே விமர்சிக்க வேண்டும்.  மாற்றுக் கட்சியைச் சார்ந்த தலைவர்களின் பொது வாழ்க்கை,  சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.
வாக்குகளைப் பெறுவதற்காக மத  உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது.  முக்கியமாக, தேர்தல் பிரசாரக் களமாக கோயில்,  மசூதி, தேவாலயங்களை மாற்றிவிடக் கூடாது.  ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நேர்ந்தாலும்,  அவரது குடும்ப வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்க வேண்டும்.  வீட்டின் முன்பாக மறியல், போராட்டம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்களது தொண்டர்களால் பிற கட்சியினரின் கூட்டம்,  ஊர்வலங்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.  போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கை சீரமைப்பதற்கு வசதியாக கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை முன்னதாகவே காவல் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் முன், அந்த இடம் நீதிமன்றத் தடையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  அவ்வாறு தடையிருந்தால் சம்பந்தப்பட்ட கட்சியோ அல்லது வேட்பாளரோ விலக்கு பெற்றிருக்க வேண்டும்.
கூட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டால், அதை காவல் துறையினர் வசம் தெரிவிக்க வேண்டும்.  தாங்களாகவே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. ஊர்வலங்களின்போது பிற கட்சித் தலைவர்களை கேலி செய்யும் வகையில் உருவபொம்மைகளை எடுத்துச் செல்லக் கூடாது.  தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com