நாமக்கல்லில் கற்றாழைச் சாறு விற்பனை மும்முரம்
By DIN | Published On : 16th May 2019 09:17 AM | Last Updated : 16th May 2019 09:17 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் கற்றாழைச் சாறு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இயற்கைக்கு மாறான உணவுகளை உண்பதும், உடலுழைப்பு இல்லாததும் நோயின் பிடியில் மனிதர்களை சிக்கவைக்கிறது. இதனால் மூலிகை பானங்களையும், இயற்கை உணவுகளையும் பலர் நாடி செல்கின்றனர். தென்னை மரங்கள் வெட்டப்படும்போது அதன் மேற்பகுதியில் உள்ள குருத்து, சர்க்கரைநோய், கல்லடைப்பு, பசியின்மை, உடல் உஷ்ணம், வாய்ப்புண், அல்சர் போன்ற நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அவற்றை வாங்கிச் சாப்பிட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல், சாலையோரங்களிலும், காடுகளிலும், வீடுகளிலும் வளர்ந்திருக்கும் சோற்றுக் கற்றாழை சாறு, உடல் வெப்பத்தை போக்குவதுடன், வயிற்றுப் புண், நரம்பு தளர்ச்சி போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது கற்றாழைச் சாறு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் கற்றாழைச் சாறு விற்பனை செய்துவரும் இளைஞர் கூறியது: ஆறு ஆண்டுகளாக இத் தொழிலை செய்து வருகிறேன். காலை நேரத்தில் வாக்கிங் வருபவர்கள் கற்றாழை ஜூஸ விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். வெயிலில் அலைபவர்களுக்கு இந்த ஜூஸ் குளிர்ச்சியைத் தரும். முக்கிய விழாக்களிலும், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கற்றாழைச் சாறை விற்பனை செய்து வருகிறேன் என்றார்.