விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன விழிப்புணர்வு கூட்டம்
By DIN | Published On : 16th May 2019 09:16 AM | Last Updated : 16th May 2019 09:16 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் வட்டாரம், செம்பாம்பாளையம் கிராமத்தில் மக்காச்சோளம் ராணுவப் படைப்புழு தாக்குதல் மற்றும் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குநர் சண்முகம் மக்காச்சோளப் பயிரில் ராணுவப் படைப்புழுத் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கிக் கூறினார்.
இதில் அவர் பேசியது: கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம், அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் மக்காச்சோளம் விதைப்பு செய்ய வேண்டும். மக்காச்சோளம் விதைப்புக்கு முன் பேவேரியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் என்ற முறையில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மக்காச்சோளம் இறவை பயறுக்கு 60 ஓ 25 செ.மீ. என்ற முறையிலும், மானாவாரி பயறுக்கு 45 ஓ 20 செ.மீ. என்ற முறையில் இடைவெளி விட்டு விதைப்பு செய்ய வேண்டும். மேலும், 10 வரிசைக்கு இடையே 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும். வயலின் வரப்பு பயிராக சூரியகாந்தி, எள், தட்டைப்பயறு ஆகிய பயறுகளை சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கலாம். மேலும், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
ஹெக்டேருக்கு 12 எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். விதைத்த 7-ஆம் நாளில் அசாடிராக்டின் 1 சதவீதம் 2 மிலி/லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயரில் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
இறுதியாக புழுக்களின் தாக்குதல் அதிகம் தென்பட்டால் பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகளான ஸ்பின்னோசிட்-12 5 மி.லி./லிட்டர் அல்லது எமாக்டின் பென்சோயேட் 5 மிலி/லிட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளிப்பதன் மூலம் ராணுவப் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோளப் பயிறுகளை பாதுகாக்கலாம் என்றார் அவர். மேலும், நுண்ணீர்ப் பாசனத் திட்டம் பற்றியும் அவர் விளக்கிக் கூறினார்.
சிறுகுறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழை தூவான் ஆகியவற்றினை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர் நிறுவனத்தின் மூலமாக சொட்டுநீர்ப் பாசனத்தை விவசாயிகள் அமைத்துக்கொள்ளலாம். தற்போது நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்து வருவதால் இருக்கும் நீரைக்கொண்டு சொட்டுநீர்ப் பாசனத்தை மேற்கொள்வதன் மூலம் அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், மல்லசமுத்திரம் வேளாண் அலுவலர் சிரஞ்சீவி, மல்லசமுத்திரம் உதவி வேளாண் அலுவலர் அலாவுதீன் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர் கிரிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.