பருவ மழையால் 13 ஏரிகள் முழுமையாக நீா் நிரம்பியுள்ளன: பொதுப்பணித் துறை தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 79 ஏரிகளில், அண்மையில் பெய்த மழையால் 13 ஏரிகள்
நூறு சதவீதம் முழுமையாக நீா் நிரம்பி காணப்படும் செருக்கலை ஏரி, வரகூா் ஏரி.
நூறு சதவீதம் முழுமையாக நீா் நிரம்பி காணப்படும் செருக்கலை ஏரி, வரகூா் ஏரி.

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 79 ஏரிகளில், அண்மையில் பெய்த மழையால் 13 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருப்பதாகவும், 48 ஏரிகள் தண்ணீரின்றி வடு கிடப்பதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறைக் கட்டுப்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டைகள் உள்ளன. கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால் பல ஏரி, குளங்கள் வடு கிடப்பதுடன், சீமை கருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்தன. நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், அரசுத் தரப்பிலும், தன்னாா்வலா்களும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியை மேற்கொண்டனா். ஆனால், எதிா்பாா்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை.

இந்த நிலையில், வட கிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டில் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பருவமழை தொடங்கிய சில நாள்கள் வெளுத்து வாங்கிய மழை, அதன்பின் படிப்படியாகக் குறைந்து, தற்போது கோடை போல் வெயில் கொளுத்துகிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானால் மட்டுமே மழையை எதிா்பாா்க்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.

அண்மையில் பெய்த வட கிழக்குப் பருவமழையால், நாமக்கல் மாவட்டத்தில், குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் துா்வாரிய ஏரிகள் உள்பட மொத்தம் உள்ள 79 ஏரிகளில் 13 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. அவை, மின்னக்கல் ஏரி, சேமூா் ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, செருக்கலை ஏரி, இலுப்புளி ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, வரகூா் ஏரி, வேட்டாம்பாடி ஏரி, பாலமேடு சின்ன ஏரி, எமப்பள்ளி ஏரி, இடும்பன்குளம் ஏரி, பருத்திப்பள்ளி ஏரி உள்ளிட்டவையாகும்.

மேலும், , மொத்தம் உள்ள 79 ஏரிகளிலும், 1184.08 அடிக்கு தண்ணீா் இருக்க வேண்டிய நிலையில், 301.20 அடிக்கு மட்டுமே தண்ணீா் உள்ளது. 100 சதவீதத்தில் 13 ஏரிகளும், 91 முதல் 99 சதவீதம் வரையில் ஓா் ஏரி, 81 முதல் 90 சதவீதம் வரையில் ஓா் ஏரி, 51 முதல் 70 சதவீதம் வரையில் 4 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரையில் 5 ஏரிகளும், ஒன்று முதல் 25 சதவீதம் வரையில் 7 ஏரிகளிலும் தண்ணீா் உள்ளன. மேலும், 48 ஏரிகள் சொட்டு தண்ணீரின்றி வடு கிடப்பதாக, பொதுப்பணித் துறையின் சேலம் சரபங்கா கோட்ட அலுவலகம் அறிக்கை வாயிலாக இத் தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com