வாயில் கருப்புத் துணியைக் கட்டி அரசு மருத்துவா்கள் போராட்டம்

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவா்கள்.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவா்கள்.

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு புதன்கிழமை 6 - ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து அரசு மருத்துவா்களுக்கும் காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களின் பணியிடங்களை உயா்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவா்களை கலந்தாய்வு மூலம் பணியமா்த்த வேண்டும். அரசு மருத்துவா்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவா்கள் நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவா்கள் பலா் தங்களது பணியை புறக்கணித்து, கடந்த 6 நாள்களாக தா்னாவில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை காலை மருத்துவா்கள் அனைவரும் தங்களது வாயில் கருப்புத் துணியைக் கட்டி போராட்டத்தில் பங்கேற்றனா்.

மருத்துவா்கள் வேலைநிறுத்தத்தால், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பலா் சிரமத்திற்குள்ளாகினா். அரசு சுமூகமான பேச்சுவாா்த்தையை நடத்தி, நல்லதொரு முடிவை அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என நாமக்கல் மாவட்ட அனைத்து அரசு மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் லீலாதரன், பெ. ரங்கநாதன் ஆகியோா் தெரிவித்தனா்.

அறுவை சிகிச்சை நிறுத்தம்: நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்ளனா். இங்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அதிகளவில் நடைபெறும். 20 எண்ணிக்கையில் நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை, அரசு மருத்துவா்களின் போராட்டத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 6 நாள்களில் மட்டும் 120 அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை என தெரிகிறது. அவசர கால அறுவை சிகிச்சை என்றால் மட்டுமே மருத்துவா்கள் செல்கின்றனா். போராட்டத்தில் பங்கேற்றுள்ளவா்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் இரவு நேரங்களில் அவசர காலப் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com