இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: அமைச்சர் பி.தங்கமணி

நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார்

நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர், வட்டத்தில் திடுமல், குறும்பலமகாதேவி,  கொத்தமங்கலம், சேளூர், வடகரையாத்தூர், வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்துணவு மையம்,  மகளிர் சுகாதார வளாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம் உள்ளிட்ட ரூ.87 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை மாநில மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி திறந்து வைத்தார்.
பின்னர்,  ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்காலில் ரூ.6.38 கோடி  மதிப்பீட்டில் நடைபெற்று முடிவடைந்த குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் பி.தங்கமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  ராஜவாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்ற நோக்கில் கரையைப் பலப்படுத்தும் வகையில் குடிமராமத்துத் திட்டப் பணியின் கீழ் ரூ.6.38 கோடி  மதிப்பீட்டில் 538 மீட்டர் அளவில் வாய்க்காலின் மேற்குப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.  தற்போது கடைமடை வரை ராஜவாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.  நாமக்கல் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறைக்கு உள்பட்ட 200க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  மழை பெய்து வருவதால் ஏரிகளில் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் இந்த குடிமராமத்துத் திட்டப்பணிகள் அமைந்துள்ளன.  நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறும்.  டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் பயம் காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை.   விவசாயிகளுக்கு தத்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரமும்,  மூப்பு அடிப்படையில் 10 ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்படுகிறது என்றார்.
முன்னதாக, நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மலர்விழி,  கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு கோட்டாட்டசியர் மணிராஜ்,  அரசு வழக்குரைஞர் தனசேகர்,  நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன்,  நாமக்கல் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com