பவித்திரம் ஏரி நிரம்பி மாந்தோப்புக்குள் புகுந்த மழை நீர்: மதகில் ஷட்டர் இல்லாததால் விவசாயிகளுக்கு பாதிப்பு

நாமக்கல் அருகே பெய்த கனமழையால் பவித்திரம் ஏரி நிரம்பி அங்குள்ள மதகு வழியாக தண்ணீர் வெளியேறியது.  

நாமக்கல் அருகே பெய்த கனமழையால் பவித்திரம் ஏரி நிரம்பி அங்குள்ள மதகு வழியாக தண்ணீர் வெளியேறியது.  இதனால் அருகில் உள்ள மாந்தோப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாயின.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் வறண்டு கிடந்த பகுதிகளெல்லாம் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.  இந்த நிலையில், திங்கள்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.  கொல்லிமலையில் பெய்த கனமழையால், மலையையொட்டிய சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பவித்திரம் ஏரிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.  ஏரி நிரம்பிய நிலையில்,  அங்குள்ள மதகில் ஷட்டர் ஏதுமில்லாததால் ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும், மாந்தோப்புக்குள்ளும் புகுந்தது.
அதுமட்டுமின்றி,  நீர் வரத்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பாலும் சோளப் பயிர்கள் இருந்த வயலுக்குள் தண்ணீர் புகுந்தது.  இரவு முழுவதும் ஏரியில் இருந்து  தண்ணீர் வெளியேறியபடி இருந்ததால்,  அதனை ஊருக்குள் புகாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி கிராம மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  ஆங்காங்கே விவசாய நிலங்கள் ஏரி, குளம் போல் மாறியிருந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் கூறியது; கொல்லிமலையின் தெற்கு பகுதியில் உள்ள பவித்திரம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஏரி, தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது.  ஏரிக்கு வரும் கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.  திங்கள்கிழமை பெய்த மழையால், கால்வாய் வழியாக மழைநீர் செல்லமுடியாமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.  பொக்லைன் கொண்டு அடைப்புகளைச் சரி செய்து வருகிறோம்.  ஏரியின் மதகுகளில் இருந்த இரும்பு ஷட்டர்கள் திருட்டு போய்விட்டதால்,  ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.  இதனால், மணல் மூட்டைகளைக் கொண்டு அடைத்து ஏரியிலேயே தண்ணீரை  சேமித்து வருகிறோம்.  புதிய ஷட்டர் அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

246 மில்லிமீட்டர் மழை பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் 246.60 மில்லிமீட்டர் மழைப் பதிவானது.
தமிழகம் முழுவதும், கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் காலையில் வெயில் கொளுத்தியபோதும்,  பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.  அதன்படி, திங்கள்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.  இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.  அதிகபட்சமாக திருச்செங்கோட்டில் 72 மில்லிமீட்டர் மழை பதிவானது.  மாவட்டம் முழுவதும் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குமாரபாளையம்-49.40, மங்களபுரம்-47,  மோகனூர்-18, நாமக்கல்-12,  பரமத்திவேலூர்-9, புதுச்சத்திரம்-3, ராசிபுரம்-18.20, சேந்தமங்கலம்-18, திருச்செங்கோடு-72, மொத்தம்-246.60.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com