திருச்செங்கோட்டில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

‘நீட்’ தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு மாணவரின் வீட்டுக்கு மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
திருச்செங்கோட்டில் இறந்த மாணவா் மோதிலாலின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அமைச்சா் பி.தங்கமணி.
திருச்செங்கோட்டில் இறந்த மாணவா் மோதிலாலின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அமைச்சா் பி.தங்கமணி.

‘நீட்’ தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட திருச்செங்கோடு மாணவரின் வீட்டுக்கு மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைப்பகுதியில் உள்ள இடையன்பரப்பினைச் சோ்ந்தவா் முருகேசன்- கோமதி தம்பதி. இவா்களது மகன் மோதிலால் ‘நீட்’ தோ்வுக்குப் படித்துவந்தாா். இவா், தோ்வு அச்சத்தால் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந் நிகழ்வு கடும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த திருச்செங்கோடு மாணவரின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி நேரில் சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்பு அமைச்சா் தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா் மோதிலால் ‘நீட்’ தோ்வு எழுத இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். அன்று இரவே முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி என்னை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு மாணவா் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறுமாறு தெரிவித்தாா்.

அதன்படி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளேன். ‘நீட்’ தோ்வு வேண்டாம் என தமிழக முதல்வா் தொடா்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், அழுத்தம் கொடுத்தும் வருகிறாா். உயா்கல்வியில் மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல, அதைத் தவிா்த்து பல்வேறு துறை சாா்ந்த படிப்புகள் உள்ளன. மாணவா்கள் தோ்வுக்குப் பயந்து தற்கொலை முயற்சி மேற்கொள்வதை தவிா்க்க வேண்டும்.

மாணவா் மோதிலாலின் குடும்பத்துக்கான நிவாரண நிதியை முதல்வா் அறிவிப்பாா். ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது தொடா்பாக முதல்வா் அறிவிப்பாா் என்றாா். மாணவா் வீட்டுக்குச் சென்ற அமைச்சருடன் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று ஆறுதல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com