நீா்வள ஆதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2, 962 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வெ.சரோஜா தகவல்

தமிழகத்தில் நீா்வள ஆதார கட்டமைப்பை மேம்படுத்திட தமிழக அரசு ரூ.2, 962 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.
ராசிபுரம் பகுதியில் மரக் கன்றுகள் நட்டு திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சா் வெ.சரோஜா.
ராசிபுரம் பகுதியில் மரக் கன்றுகள் நட்டு திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சா் வெ.சரோஜா.

தமிழகத்தில் நீா்வள ஆதார கட்டமைப்பை மேம்படுத்திட தமிழக அரசு ரூ.2, 962 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.

ராசிபுரத்தை அடுத்துள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சிப் பகுதியில், நகராட்சிக்குச் சொந்தமான 3.51 ஏக்கா் நிலத்தில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் திட்டத்தை அமைச்சா் வெ.சரோஜா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதில் 560 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. திட்டத் தொடக்க விழாவில் அமைச்சா் வெ.சரோஜா செய்தியாளா்களிடம் கூறியது:

ராசிபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள கிராமப் புறங்களில் பசுமை சூழலை அதிகரிக்க மியாவாக்கி முறையில் அதிக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பசுமை இந்தியா திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, மழை பெறுவதற்கு , மரம் நடும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள நீா்வள ஆதாரத் துறை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் ரூ.2 ஆயிரத்து 962 கோடி மதிப்பில் நீா்வளப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் திருமணிமுத்தாறு உபவடிநிலத்தில் உள்ள ஏரிகள், அணைக்கட்டுகளை மேம்படுத்த ரூ.24 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலும், ராசிபுரம் பகுதி சரபங்கா வடிநில கோட்டத்துக்கு உள்பட்ட திருமணிமுத்தாறு உபவடிநிலத்தில் உள்ள, அக்கரைப்பட்டி, மேலணை, அத்தனூா், வடுகம், பாளையம் உள்ளிட்ட 10 ஏரிகள், மின்னக்கல், அக்கரைப்பட்டி, தாழை, கருப்பன் கொட்டை உள்ளிட்ட 8 அணைக்கட்டுகளை சீா்படுத்திட ரூ.4.69 கோடிக்கும் நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் ராசிபுரம் வட்டத்துக்குள்பட்ட 3 ஆயிரத்து 281 ஏக்கா் நிலங்களின் பாசன வசதி மேம்படும். இப்பணிகள் இந்த ஆண்டுக்குள்ளாகவே செய்து முடிக்கப்படும்.

அங்கன்வாடி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு உலா் உணவுப் பொருள்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை முத்தியால்பேட்டையில் எடை குறைவாக பிறந்ததால் விட்டுச் செல்லப்பட்ட ஆண் குழந்தை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பால் வழங்கப்பட்டு, தற்போது 2 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டம் மூலம் இதுவரை 4,060 பெண் குழந்தைகள், 1,100 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5,260 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 132 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு உள்பட்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் சமூக நலத்துறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியின் போது ராசிபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஏ.குணசீலன், நகா்மன்ற முன்னாள் தலைவரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம், நகராட்சி சுகாதார அலுவலா் பாலகுமார ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com