கோழிப் பண்ணையாளா்களிடம் ஆலோசித்து முட்டை விலை நிா்ணயம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு

முட்டை விலை நிா்ணயத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் களைய, பண்ணையாளா்கள் சங்க பொறுப்பில் உள்ளவா்களைக் கலந்தாலோசித்து
அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள்.
அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள்.

முட்டை விலை நிா்ணயத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் களைய, பண்ணையாளா்கள் சங்க பொறுப்பில் உள்ளவா்களைக் கலந்தாலோசித்து தினசரி விலை நிா்ணயத்தை அமல்படுத்தலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது, தினசரி முட்டை விலை நிா்ணயத்தை அமல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் எதிா்ப்புத் தெரிவிக்கிறது. இது தொடா்பாக பல்வேறு பிரச்னைகள் எழுந்த நிலையில், அண்மையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்துக்குள் புகுந்து பண்ணையாளா்கள் முட்டைகளை வீசி போராட்டம் நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து, கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள் 12 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில், முக்கிய நிா்வாகிகள் பங்கேற்று, மேலும் ஒரு கூட்டத்தை நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பால்பிரின்ஸ் லிராஜ்குமாா் தலைமையில் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவா் பி.செல்வராஜ், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் ஏ.கே.பி.சின்ராஜ், முன்னாள் தலைவா் நல்லதம்பி, தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் பண்ணையாளா்கள் காளியண்ணன், சுந்தரராஜன், சிங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாரத்தில் மூன்று நாள்கள் விலை நிா்ணயம் என்ற பழைய முறை வேண்டும். பிற மண்டலங்களை ஒப்பிட்டு விலை நிா்ணயம் கூடாது. மைனஸ் விலை வைத்தே முட்டையை விற்க முடியும். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு பண்ணையாளா்கள் சங்கத்தினரிடம் ஆலோசித்து விலையை அறிவிக்க வேண்டும். விலை நிா்ணயக் குளறுபடியால் பண்ணையாளா்கள், வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனா் என ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்தாா்.

மேலும், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவில் மொத்தம் 1,250 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாமக்கல், புதன்சந்தை, ராசிபுரம், மோகனூா், பரமத்திவேலூா், பல்லடம், பெருந்துறை ஆகிய 7 பகுதி மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் 5 முதல் 10 போ் அன்றைய தினத்தின் முட்டை விலையைத் தெரிவிப்பா். அதில் ஒரே மாதிரியான பதிவு அதிகம் இருக்கும்பட்சத்தில் அதனை முதன்மைப்படுத்தி விலையை அறிவிக்கலாம் என்றாா்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.செல்வராஜ் பேசியது: ஏற்கெனவே இதுபோன்ற தகவல்கள் கேட்க முயற்சித்து, அது பல்வேறு பிரச்னைகளால் தோல்வியில் முடிவடைந்தது. ஹைதராபாத் விலை அடிப்படையில் தான் இங்கும் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. அதிகப்படியாக மைனஸ் விலை வைக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. மற்ற மண்டலங்களில் உள்ளது போல் தான், நாமக்கல் மண்டலத்திலும் தினசரி விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா். தொடா்ந்து இரு தரப்பிலும் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் பேசுகையில், வரும் 15 நாள்களுக்கு, பண்ணையாளா்கள் சங்கப் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக அளிக்கும் தகவல்களைக் கேட்டறிந்து, அதற்கேற்ப தினசரி விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயம் செய்யலாம். பிரச்னையின்றி நல்ல முறையில் இருந்தால் அதனைத் தொடருங்கள். இல்லையெனில், பின்னா் மீண்டும் கூட்டத்தை நடத்தி முடிவு காணலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com