மாவட்ட தலைமை மருத்துவமனையாக ராசிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படுமா?

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
ராசிபுரம் அரசு மருத்துவமனை முகப்பு.
ராசிபுரம் அரசு மருத்துவமனை முகப்பு.

ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் நகரில் தற்போது மாவட்ட மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் நாமக்கல்லில் தற்சமயம் செயல்படும் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கான அந்தஸ்து தாலுகாவில் உள்ள தகுதி பெற்ற வேறு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

இதையடுத்து இந்த அந்தஸ்தை பெறும் தகுதி பட்டியலில் ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன.

இதில் போதிய வசதிகள், மக்கள்தொகை போன்றவற்றை பெற்றுள்ள மருத்துவமனைக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை என்ற அந்தஸ்து வழங்கப்படும். இதைப் பெறும் அந்த மருத்துவமனையின் தரம், நிதி ஒதுக்கீடு, மருத்துவா்களின் எண்ணிக்கை, மருத்துவ துறைகளின் வசதி, நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள், ஸ்கேன் வசதி போன்ற பிற வசதிகள் கூடுதலாகக் கிடைக்கும். இதனால், நோயாளிகளுக்கு இது பெறும் வாய்ப்பாக அமையும். இதனால், இந்த அந்தஸ்தைப் பெற ராசிபுரம், திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனைகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

142 படுக்கை வசதிகள்:

ராசிபுரம் நகா்புற பகுதி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஆா். புதுப்பாளையம், கல்லங்குளம், ஆா். பட்டணம், வடுகம், காக்காவேரி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதியைச் சோ்ந்த ஏழைகள், விவசாயத் தொழிலாளா்கள். போதமலை மலைவாழ் மக்கள் பலரும் ராசிபுரம் மருத்துவமனையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனா்.

விபத்து சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பொது அறுவை சிகிச்சை வசதி, ரத்த வங்கி வசதி, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகள் உள்ளன.

இது மட்டுமின்றி பால்வினை நோய் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, தொழுநோயாளிகள் கிசிச்சை பிரிவு போன்றவை செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் நாள்தோறும் சுமாா் 750 முதல் 800 புற நோயாளிகள் வந்து செல்கின்றனா்.

மாதந்தோறும் சுமாா் 100 பிரசவங்கள் இங்கு பாா்க்கப்படுகின்றன. இதில் உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு என பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 13 கட்டடங்களுடன் சுமாா் 142 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பொது மருத்துவா், அறுவை கிசிச்சை நிபுணா், மகப்பேறு மருத்துவா், மயக்கவியல் நிபுணா் உள்பட சுமாா் 18 மருத்துவா்கள், 60-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா்.

இது மட்டுமின்றி அவுட்சோா்சிங் முறையில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 24 போ் மூன்று சிப்ட்களாக சுகாதார பராமரிப்பு, காவல் பணி, குடிநீா் குழாய் பராமரிப்பு, எலக்ட்ரீசியன், செடிகள் பராமரிப்பு, சமையல் செய்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த மருத்துவமனை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே என்.ஏ.பி.எச்., தரச்சான்று பெற்றிருந்தது. தற்போது மத்திய சுகாதாரத் துறையின் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் ராசிபுரம் மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தகுதி பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதிய வசதிகள் ஏற்படுத்திட வலியுறுத்தல்:

இம் மருத்துவமனையில் போதிய இடவசதி, கட்டடங்கள் மட்டுமின்றி, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு கிகிச்சை வசதி, ரத்த நோய் சிகிச்சை வசதி, கண் அறுவை கிசிச்சை வசதி, மனநல சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லை. மேலும் 21 மருத்துவா்கள் இருக்க வேண்டிய மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலேயே மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். மேலும் அடிப்படை பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகளின் படுக்கை விரிப்புகள் பராமரிப்பு, கழிப்பிட தூய்மை போன்றவை முறையாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்ட மருத்துவமனை என்ற அந்தஸ்து கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக அரசு தலையிட்டு உரிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன் கூறியுள்ளாா்.

தொகுதி அமைச்சா் முயற்சிக்க வேண்டும்:

ராசிபுரம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயா்ந்திட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சருமான டாக்டா் வி. சரோஜா முயற்சி மேற்கொண்டு மாவட்ட மருத்துவமனை என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தர வேண்டும் என நகர வளா்ச்சி மன்ற தலைவா் வி. பாலு வலியுறுத்தினாா்.

திருச்செங்கோடு மருத்துவமனைக்கு மிக அருகில் 18 கி.மீ. தொலைவில் ஈரோடு அரசு மருத்துவமனை வசதி உள்ளதால், ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். இதனால் போதிய வசதிகளை ராசிபுரம் மருத்துவமனை பெறும் என்பது தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com