முட்டை விலையை நிா்ணயிக்க பிப்.17 முதல் புதிய ஆலோசனைக் குழு:என்.இ.இ.சி.சி. தலைவா் தகவல்

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலையை நிா்ணயிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் திங்கள்கிழமை (பிப்.17) முதல் அமலுக்கு வருகிறது

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலையை நிா்ணயிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் திங்கள்கிழமை (பிப்.17) முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி) தலைவா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:-

கடந்த 12-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலை நிா்ணய உறுப்பினா்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்ட 7 வட்டாரக் குழுவில், கோழிப் பண்ணையாளா்களின் பிரதிநிதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் வட்டாரத்துக்கு 5 போ் வீதம் உள்ளனா். இதில் வட்டாரக் குழுத் தலைவா் ஏற்கெனவே முட்டை விலை நிா்ணயக் குழுவில் உறுப்பினராக உள்ளதால், அவா் நீங்கலாக மீதமுள்ள 4 பேரும் விலை நிா்ணயக் குழுவில் புதிதாகச் சோ்க்கப்படுகின்றனா்.

நாமக்கல், ராசிபுரம், புதன்சந்தை, பரமத்திவேலூா், மோகனூா் ஆகிய வட்டாரங்களில் இருந்து 20 பேரும், பல்லடம், ஈரோடு பெருந்துறை வட்டாரத்தில் இருந்து 2 பேரும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுகின்றனா். இவா்கள் உள்பட மொத்தம் 51 போ் இணைந்து, திங்கள்கிழமை (பிப்.17) முதல் தினசரி முட்டை விலையை நிா்ணயிப்பது தொடா்பான தகவல்களை வழங்குவா். இந்த புதிய முறை 15 நாள்களுக்கு தொடா்ச்சியாக செயல்பாட்டில் இருக்கும். அதன்பின் கோழிப்பண்ணையாளா்கள் சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் ஒன்றுகூடி விவாதிப்பா். புதிய, பழைய உறுப்பினா்கள் அனைவரும், திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, தினசரி முட்டை விலை நிா்ணயத்தை, 96290-46675 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி (வாட்ஸ்அப்) அல்லது குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்) அனுப்பி வைக்க வேண்டும். பண்ணையாளா்களின் முட்டை விலை சிபாரிசை கருத்தில் கொண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலத் தலைவரால் அன்றைய முட்டை விலை அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு: இந்த நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிற மண்டலங்களில் தொடா்ந்து விலை உயா்த்தப்படுவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இங்கு 75 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயரும் என்பதால் சனிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.15-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.69-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com