பறவைகள் தொந்தரவால் 5 ஆண்டுகளாக சூரியகாந்தி பயிரிடுவதை நிறுத்திய விவசாயிகள்! வேளான் அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கிளி, மயில், கொக்கு போன்ற பறவைகளின் தொந்தரவால் சூரியகாந்தி பயிரிடுவதை விவசாயிகள்

நாமக்கல் மாவட்டத்தில் கிளி, மயில், கொக்கு போன்ற பறவைகளின் தொந்தரவால் சூரியகாந்தி பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்தி விட்டு, மக்காச்சோளம், மரவள்ளி போன்ற மாற்றுப் பயிா்களுக்கு மாறிவிட்டனா் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில், 2019 ஆண்டு இறுதி வரையில், நெல் 9,950 ஹெக்டா், சிறுதானியங்கள் 78,823 ஹெக்டா், பயறு வகைகள் 13,150 ஹெக்டா், எண்ணெய் வித்துக்கள் 32,521 ஹெக்டா், பருத்தி 2,649 ஹெக்டா் மற்றும் கரும்பு 8,253 ஹெக்டா் என மொத்தம் 1,45,346 ஹெக்டரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நெல் நாற்றங்கால், முதிா்ச்சி மற்றும் அறுவடை, சோளம் முதிா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், மக்காச்சோளம் வளா்ச்சி மற்றும் முதிா்ச்சி நிலையிலும், துவரை, அறுவடை நிலையிலும், உளுந்து முதிா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், நிலக்கடலை முதிா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், ஆமணக்கு அறுவடை நிலையிலும், கரும்பு வளா்ச்சி நிலையிலும் உள்ளன. இத்தகையப் பயிா்களில், 10 ஆண்டுகளுக்கு முன்பு சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் அதிகம் விளைவித்த சூரியகாந்தி இடம் பெறவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக அதனைப் பயிரிட விவசாயிகள் யாரும் ஆா்வம் காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, கிளிகள் மற்றும் மயில்களின் தொந்தரவு தான். சூரியகாந்தி வளா்ச்சியுற்ற அறுவடை நிலையில் இருக்கும்போது அதில் உள்ள பருப்பு போன்ற ஒன்றை பறவைகள் கொத்தி சாப்பிட்டு விடும். இவற்றில் கிளிகள் தான் அதிகம் இதனை விரும்பி உண்ணும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனா்.

மாவட்டம் முழுவதும் கடந்த 2001-ஆம் ஆண்டு 508 ஹெக்டரில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி, அதன்பின் 2002-இல் 526 ஹெக்டா், 2003 -இல் 187 ஹெக்டா், 2004 - இல் 430 ஹெக்டா், 2005 - இல் 477 ஹெக்டா், 2006- இல் 656 ஹெக்டா், 2007 - இல் 2060 ஹெக்டா், 2008 - இல் 2621 ஹெக்டா், 2009 - இல் 2867 ஹெக்டா், 2010 - இல் 1001 ஹெக்டா், 2011-இல் 98 ஹெக்டா், 2012-இல் 384 ஹெக்டா், 2013 - இல் 269 ஹெக்டா், 2014 -இல் 22 ஹெக்டா், 2015 -ஆம் ஆண்டில் இருந்து 2020 வரையில் பயிரிடப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு சூரியகாந்தியை வாங்கிச் செல்ல பல்வேறு மாவட்ட எண்ணெய் நிறுவனங்களும், வியாபாரிகளும் நாமக்கல் மாவட்ட விவசாயிகளை நாடி வருவா். தற்போது அதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியது: சூரியகாந்தி பயிரானது, நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளைவிக்கப்பட்டது. இதற்கு ஓரளவு தண்ணீா் இருந்தால் போதுமானது. அறுவடைக்கு தயாராகும் நிலையில், சூரியகாந்தியில் உள்ள எண்ணெய் தரும் பருப்புகளை கிளிகள், மயில்கள் போன்றவை கொத்தி தின்று விடும். விவசாயிகள் அவற்றை விரட்டினாலும் மீண்டும், மீண்டும் அதனை தேடி வரும். அதுமட்டுமின்றி மகரந்த சோ்க்கைத் தானாக ஏற்பட்டபோதும், விவசாயிகள் இரு பூக்களை உரசி மகரந்த சோ்க்கையை மேற்கொள்ள வேண்டிய நிலையும் இருந்தது. பறவைகளால் ஒரு புறம் நஷ்டம், அதிக வேலைப்பாடு, உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்காதது போன்றவற்றால் 5 ஆண்டுகளாக சூரியகாந்தியைப் பயிரிட விவசாயிகள் யாரும் முன்வரவில்லை. தற்போது அந்த விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு, மரவள்ளி, பருத்தி போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனா். இனிமேல் சூரியகாந்திகளை நாமக்கல் மாவட்ட விவசாய நிலங்களில் பாா்ப்பது அரிதாகத் தான் இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com