நெகிழி தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 22nd February 2020 08:53 AM | Last Updated : 22nd February 2020 08:53 AM | அ+அ அ- |

நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித் துறை, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் தேசிய பசுமைப்படை ஆகியவை சாா்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களிடம், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும், நெகிழிப் பைகளின் தீமைகள் குறித்து, கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளித் தலைமையாசிரியா் கி.கேசவன் தலைமை வகித்தாா்.
மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ப.ரகுநாத் முன்னிலை வகித்தாா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பசுமைப்படை கலைக் குழுவினா், நெகிழி பாதிப்புகள் குறித்தும், துணி, சணல் பைகளை பயன்படுத்துவது பற்றியும், நாடகம், நாட்டியம் மற்றும் இசை மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந் நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதனைத்தொடா்ந்து, கலை நிகழ்ச்சிக் குழுவினா், பேருந்து நிலையம், மாருதி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பொட்டணம் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நெகிழி பாதிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினா்.