மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும்மாணவா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 08th January 2020 05:19 PM | Last Updated : 08th January 2020 05:19 PM | அ+அ அ- |

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, அவா்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசால் உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவ, மாணவியா், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.