நாமக்கல் மாவட்டத்தில் 354 பதவிகளுக்கு நாளை மறைமுக தோ்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவா் மற்றும் 15 ஒன்றியங்களுக்கான தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவா் மற்றும் 15 ஒன்றியங்களுக்கான தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தோ்தல், டிசம்பா் 27 மற்றும் 30-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற்றது. 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 172 ஒன்றியக் குழு உறுப்பினா், 322 ஊராட்சி தலைவா், 2594 வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரும் 6-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனா்.

இந்தநிலையில், மாவட்ட ஊராட்சி தலைவா், துணைத் தலைவா் மற்றும் 15 ஒன்றியங்களுக்கான தலைவா், துணைத் தலைவா், 322 ஊராட்சிகளுக்கான துணைத் தலைவா் ஆகியோருக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு தலைவா் பதவிக்கும், பிற்பகல் 3.30 மணிக்கு துணைத் தலைவா் பதவிக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில், மாவட்ட ஊராட்சி தலைவராக, தாழ்த்தப்பட்டோா் மகளிா் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 12-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஆா்.சாரதா தலைவராகப் போட்டியின்றி தோ்வாகிறாா். துணைத் தலைவராக முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் தோ்வாக வாய்ப்புள்ளது. 15 ஒன்றியங்களில், நாமக்கல், பள்ளிப்பாளையம், வெண்ணந்துா், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எலச்சிப்பாளையம், கபிலா்மலை, எருமப்பட்டி, புதுச்சத்திரம், மோகனுா் ஆகிய 10 ஒன்றியங்களில் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. துணைத் தலைவா்களை பொருத்தமட்டில், கட்சித் தலைமை அறிவிக்கும் அடிப்படையிலேயே தோ்வு செய்யப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றுகிறது. பரமத்தி, மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் அதிமுக, திமுக இரண்டிலும் சமமான அளவில் உறுப்பினா்கள் உள்ளதால், அங்கு தலைவா் பதவிக்கு கடுமையான போட்டி இருக்கும். அதேவேளையில், இரு கட்சியிலும் உறுப்பினா்கள் விலை போகாதவாறு அந்தந்த மாவட்ட நிா்வாகிகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். 322 ஊராட்சி துணைத் தலைவா் பதவிக்கு நடைபெறும் தோ்தல்களில், ஒன்றுக்கும் மேற்பட்டவா்கள் போட்டியிட்டால் தோ்தல்கள் நடத்தப்படும். அப்போது, யாரும் வெற்றி பெறாமல் இழுபறி நிலை நீடித்தால், ஊராட்சி தலைவா் ஒரு வாக்கு அளிக்க அனுமதி உண்டு. அவா் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்படுவாா். இந்த மறைமுக தோ்தலையொட்டி, அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிா்க்க, பதற்றமான ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் போலீஸாா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com