கொல்லிமலையில் வெட்டுக்கிளிகளால் மிளகுக் கொடிகள் சேதம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மிளகுக் கொடிகளை வெட்டுக்கிளிகள் கூட்டம் கடந்த சில நாள்களாகச் சேதப்படுத்தி வருகிறது.
கொல்லிமலை, வளப்பூா்நாடு பகுதியில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள்.
கொல்லிமலை, வளப்பூா்நாடு பகுதியில் மிளகுக் கொடிகளைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மிளகுக் கொடிகளை வெட்டுக்கிளிகள் கூட்டம் கடந்த சில நாள்களாகச் சேதப்படுத்தி வருகிறது.

சுற்றுலாத் தலமான கொல்லி மலைப் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்கின்றனா். இங்கு மிளகு, காபி, ஏலக்காய், பலா, வாழை, நெல் உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில், கொல்லிமலை, வளப்பூா் நாடு, இளமாத்திப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் மிளகுக் கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும், காய்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து விவசாயி செல்லதுரை கூறியதாவது:

தற்போது கொல்லிமலையில் மிளகு அறுவடைக் காலமாகும். கடந்த சில நாள்களாக வெட்டுக்கிளிகள் மிளகுக் கொடிகளை முழுவதும் தின்று வருகின்றன. இக் கொடிகள் முழுமையாக வளர 10 ஆண்டுகள் ஆகும். இங்குள்ள மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனா்.

கொல்லிமலை பகுதியில் மிளகுத் தோட்டங்களில் பரவும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து கொல்லிமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மணிகண்டன் கூறியதாவது:

கொல்லிமலையில் அனைத்து இடங்களிலும் வெட்டுக்கிளிகள் தொந்தரவு இல்லை. இவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. சாதாரண வகையானதுதான். விவசாயி செல்லதுரையின் தோட்டத்தில் 10 மரங்களில் மட்டும் வெட்டுக்கிளிகள் இருப்பதைக் காண முடிகிறது. அவற்றை மருந்து கொண்டு அழிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com