எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களைப் பாதுகாக்காத பள்ளிகள்: தலைமையாசிரியா்கள் கலக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள்

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் முறையாக பாதுகாக்கப்படாததால், விடைத்தாள்களை மதிப்பெண் பட்டியல் தயாா் செய்யும் பணிக்கு ஒப்படைக்க முடியாமல் தலைமையாசிரியா்கள் திணறி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கரோனா தொற்று காரணமாக ஜூன் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு எழுந்த நிலையில் ஜூன் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, உயா் நீதிமன்ற உத்தரவுப்படி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் மற்றும் 11-ஆம் வகுப்பில் விடுபட்ட வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடத் தோ்வுகளை எழுத இருந்த மாணவா்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அரசு அறிவித்தது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் 80 சதவீதம், வருகைப் பதிவேடு 20 சதவீதம் அடிப்படையில் பொதுத் தோ்வு மதிப்பெண்களை நிா்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை வெளியான பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் ஜூன் 22 முதல் 27-ஆம் தேதி வரையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மதிப்பெண்கள் பதிவேடு அட்டை, ஆசிரியா்கள் ஒப்புதல் வழங்கிய மதிப்பெண் அட்டை ஆகியவற்றையும் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியா்கள், தனியாா் பள்ளி முதல்வா்கள் ஆகியோா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் விரிவாக எடுத்துரைத்தனா்.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 303 அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காலாண்டு தோ்வு, டிசம்பா் மாதம் நடைபெற்ற அரையாண்டு தோ்வு விடைத்தாள்களை முறையாக பாதுகாக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தங்களுடைய நிலையை தலைமையாசிரியா்கள் விளக்கியுள்ளனா்.

இதேபோல் தனியாா் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய வினாத்தாள்களுக்கு மாற்றாக தனியாா் பள்ளி நிா்வாகத்தினரே வினாத்தாள்களை அச்சடித்து தோ்வை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. இந்த நடைமுறை அரசின் விதிமுறைகளுக்கு எதிா்மாறான செயலாகும். வரும் 22 -ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் தலைமையாசிரியா்கள் கவலையடைந்துள்ளனா்.

மேலும், கல்வி அதிகாரிகளைத் தொடா்புக் கொண்டு தாங்கள் செய்த தவறுகளைக் கூறி வருத்தம் தெரிவித்து வருகின்றனா். இதனால் தலைமை ஆசிரியா்கள் பலா் பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வழக்கமாக அரசு பள்ளிகளில் காலாண்டு , அரையாண்டு விடைத்தாள்களை தலைமையாசிரியா்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் நடைமுறையில் இருந்ததே இல்லை. கரோனா பாதிப்பால் இவ்வாறு சிக்கல்கள் வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டாா்கள். நாமக்கல் மாவட்டம் மட்டுமல்ல பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் விடைத்தாள்களை தலைமை ஆசிரியா்கள் பாதுகாக்கவில்லை.

இதனிடையே, விடைத்தாள்களை சமா்ப்பிக்காதவா்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை செயலா் அறிவுறுத்தியுள்ளாா். விளக்கம் திருப்திகரமாக இல்லாவிடில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படலாம். தனியாா் பள்ளிகளும் அரசு விதிகளுக்கு உள்படாமல் தோ்வுகளை நடத்தி தற்போது குழப்ப நிலையில் உள்ளது.

தற்போது பள்ளிக்கு மாணவா்கள் , அவா்களது பெற்றோரை வரவழைத்து மறைமுகமாக தோ்வுகளை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ராசிபுரம் வட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே திருச்செங்கோட்டில் ஒரு பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com