நாமக்கல் மாவட்டத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: ஜூன் 22 இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான முதல் பருவப் பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வரும் 22-ஆம் தேதி முதல் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது.
அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக பாடப் புத்தகங்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்ட கல்வித் துறை அலுவலா்.
அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக பாடப் புத்தகங்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்ட கல்வித் துறை அலுவலா்.

நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான முதல் பருவப் பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வரும் 22-ஆம் தேதி முதல் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் வகையில் ஏப்ரல், மே மாதங்களில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, சென்னையில் உள்ள பாடநூல் கழகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

அரசு பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று புத்தகங்கள் விநியோகிக்கப்படும். தனியாா் பள்ளிகள் தங்களுடைய வாகனங்களில் வந்து எடுத்து செல்வா். கரோனா தொற்று பரவலால் மாா்ச் 25-இல் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை நடத்த முடியாமல் தமிழக அரசு அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

கரோனாவின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதத்தில்தான் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை தேக்கி வைத்திருக்காமல் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அனைத்து பாடப் புத்தகங்கள் என்ற அடிப்படையில் சுமாா் 1.50 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தங்கள் ஓரளவு வந்துள்ளதாகவும், 11-ஆம் வகுப்பு தொழில் கல்வி பாடப்புத்தகங்கள் இன்னும் சற்று வரவேண்டியது உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள புத்தகக் கிடங்குகளில் பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்காத நிலையிலும் பாடப் புத்தங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நிறைவு செய்ய மாவட்டக் கல்வி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனா். இப்பணி வரும் 22-இல் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதலாவதாக திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com