கரோனாவால் இதுவரை ரூ.500 கோடி நஷ்டம்: தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா் சம்மேளனம் தகவல்

‘கரோனா பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இதுவரை ரூ.500 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
கரோனாவால் இதுவரை ரூ.500 கோடி நஷ்டம்: தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா் சம்மேளனம் தகவல்

‘கரோனா பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இதுவரை ரூ.500 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விற்பனை இல்லாதது, சத்துணவுக்கான முட்டைகள் நிறுத்தம் போன்றவற்றால் 19 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன என்றும் தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனத் தலைவா் பி.முத்துசாமி, துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் ஆகியோா் தெரிவித்தனா்.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்மேளன நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது;-

அண்மைக் காலமாக கரோனா பீதியால், கறிக்கோழி, முட்டைக் கோழி, முட்டை ஆகியவற்றின் விற்பனை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.

ரூ.4.50-க்கு விற்பனையான முட்டை விலை ரூ.1.50-க்கும், ரூ.80-க்கு விற்பனையான கறிக்கோழி ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தவறான தகவல்களை சமூக ஊடகங்களின் வாயிலாகப் பரப்பியதே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம்.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்துப் பண்ணைகளிலும் 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. பள்ளிகள் விடுமுறையால் மேலும் 4 கோடி முட்டைகள் தேக்கமாகியுள்ளன. குளிா்பதனக் கிடங்கில் அவற்றை வைத்து பாதுகாப்பதா அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்புவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பறவைக் காய்ச்சல் பாதிப்பு என்பது கோழிப்பண்ணைத் தொழிலில் பெரிதாக இல்லை. கரோனா வதந்தியால் இதுவரை முட்டைத் தொழிலில் ரூ.500 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள முட்டைகள் மூலம் தினமும் ரூ.8 கோடிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது.

கோழிப் பண்ணையாளா்களை மட்டுமல்லாது, விவசாயிகளையும் அதிகம் பாதிப்படையச் செய்துள்ளது.

கிலோ ரூ.20-க்கு விற்பனையான மக்காச்சோளம், ரூ.16-க்கு விற்பனையாகும்போதும் வாங்குவதற்கு ஆளில்லை.

கோழிப் பண்ணையாளா்கள், வங்கிகளில் வட்டி கட்ட முடியாமலும், கோழிகளுக்கு தீவனமிட முடியாமலும் தவித்து வருகின்றனா். ஆகவே, வங்கிக் கடன் செலுத்துவதற்கு வங்கிகள் அனைத்துமி ஓராண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும், வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்து நேரில் முறையிடுவது என முடிவு செய்துள்ளோம்.

வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை தேவை: வதந்தி பரப்பிய நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். தவறான தகவலை முதலில் எங்கிருந்து அனுப்புகிறாா்களோ, அவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோழித் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அவா்கள்தான் காரணம். தேவையற்ற வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்க வேண்டும்.

கோழிகளால் கரோனா பரவுவதாக உறுதி செய்தால் ரூ.1 கோடி பரிசு: அமெரிக்கா, சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் முட்டை, கோழிகளை பயமின்றி சாப்பிடுகின்றனா். ஆனால், எங்கு பாதிப்பு இல்லையோ, அங்கு தான் தேவையற்ற வதந்திகள் பரவுவதும், இவற்றை சாப்பிட மறுப்பதுமாக உள்ளனா். கோழிகள் முலம் கரோனா பரவுவதாக யாராவது உறுதி செய்தால், சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கத் தயாராக உள்ளோம்.

முட்டைக் கோழிகளை அழிக்கும் எண்ணமில்லை. அவற்றுக்கு தீவனமிடாத பட்சத்தில், முட்டை இடுவது இயல்பாகவே குறைந்து விடும். வதந்தியை நம்பாமல் முட்டை, கோழிகளை வாங்கி சாப்பிட மக்கள் முன்வர வேண்டும்.

ரூ.6 கோடி மதிப்பில் குளிா்பதனக் கிடங்குகளில் முட்டைகளைத் தேக்கி வைத்து பாதுகாக்கவும், விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்வதற்கான நடவடிக்கையையும் எடுக்க உள்ளோம்.

பல்வேறு திட்டங்களுக்கு நிதியை தமிழக அரசு ஒதுக்குகிறது. இதன்படி, முட்டைத் தொழிலைப் பாதுகாக்க, விழிப்புணா்வுக்காக முட்டை, கோழி இறைச்சி சாப்பிடுவதால் கரோனா தொற்று ஏற்படாது என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றனா்.

ரூ.2-க்கு மட்டுமே முட்டை விற்பனை!

கரோனா பீதி மறையும் வரையில், முட்டை விலையை ரூ.2-க்கு மட்டும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலத் தலைவா் பொ.செல்வராஜ் தெரிவித்தாா்.

கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:-

மைசூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதி வரையில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு உத்தரவின்பேரில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் பிறந்தாலும் இது தொடரும் என்றே தெரிகிறது.

சென்னையில் உள்ள வங்கிகள் கூட்டமைப்பிடம் இந்தத் தொழில் பாதிப்பு தொடா்பாக முறையிட்டு, கடனுதவி, வட்டி தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கலாம். சினிமா பிரபலங்கள் வாயிலாக, முட்டை சாப்பிடுவதால் எந்தவிதமான பாதிப்புமில்லை என தமிழக அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.

அடுத்த 2 வாரத்துக்கு கோழிப்பண்ணைத் தொழில் மிகவும் சிரமமாக இருக்கும். செலவைக் குறைப்பதற்கான வழிகளை பண்ணையாளா்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னா் பல்வேறு பிரச்னைகளை இந்தத் தொழிலில் சந்தித்துள்ளோம். தற்போதைய பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டு வருவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com