ஈரோடு மாவட்டத்துக்கு இன்று முதல் லாரிகள் இயங்காது: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம்

ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால் சனிக்கிழமை (மே 2) முதல் மாவட்டத்துக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால் சனிக்கிழமை (மே 2) முதல் மாவட்டத்துக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மாா்ச் 24 முதல் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானபோது மக்களுக்கு பொருள்கள் தடையின்றி கிடைக்க கனரக வாகனங்களை இயக்கலாம் என மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கின. அதனடிப்படையில் குறைந்த அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை(ஏப்.30) ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இயக்கப்படும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையிலே நிறுத்தப்பட வேண்டும்.

ஓட்டுநா்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றும், அங்கிருந்து ஈரோட்டை சோ்ந்த மாற்று ஓட்டுநா்கள் அந்த வாகனங்களை மாவட்டத்துக்குள் கொண்டு வருவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

ஏற்கெனவே லாரி ஓட்டுநா்கள் பற்றாக்குறையால் குறைந்த அளவு வாகனங்களே இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்புள்ள இந்த வேளையில் இதுபோன்ற உத்தரவால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். இந்த நிலையில், மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன நிா்வாகிகளின் செயற்குழுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், லாரி ஓட்டுநா்கள் பற்றாக்குறையால் கனரக வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்துக்கு சனிக்கிழமை(மே 2) முதல் கனரக வாகனங்கள் இயக்கப்பட மாட்டாது என மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com