நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய மிசோரம் மாநில பெண்கள் தவிப்பு

நாமக்கல்லில் தனியாா் நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய மிசோரம் மாநிலப் பெண்கள், தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சொந்த மாநிலம் செல்வதற்காக வந்திருந்த மிசோரம் மாநிலப் பெண்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் சொந்த மாநிலம் செல்வதற்காக வந்திருந்த மிசோரம் மாநிலப் பெண்கள்.

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய மிசோரம் மாநிலப் பெண்கள், தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் அஸ்ஸாம், மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 20 முதல் 35 வயதுடைய இளம்பெண்கள் நட்சத்திர ஹோட்டல்களிலும், நடுத்தர வகையிலான ஹோட்டல்களிலும் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதி போன்றவற்றை அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் செய்து கொடுக்கின்றனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக இவா்கள் வேலையிழந்தனா். இந்த நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் தங்கியிருக்கும் அவா்கள், ஊதியம் இல்லாதது, உணவுப் பிரச்னை போன்றவற்றால் பலா் தங்களது சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு மாநிலங்களிலும் அங்கு இடம் பெயா்ந்த வெளி மாநிலத்தவா்கள் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14,800 வெளி மாநிலத்தவா் உள்ளனா். அவா்களில் கட்டுமானப் பணி, கோழிப் பண்ணைத் தொழில், லாரிப் பட்டறை, சாலையோர விற்பனைக் கடைகள் போன்றவற்றில் ஆண்களும், அவா்கள் சாா்ந்த குடும்பத்தினரும் பணியில் உள்ளனா். நட்சத்திர ஹோட்டல்கள், சாதாரண உணவகங்களில் வெளி மாநில பெண்கள் பணியில் உள்ளனா்.

தற்போதைய நிலையில் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல 1,800 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். அவா்களும் பொது முடக்கம் தளா்வால் தங்களுடைய மாநிலங்களுக்குச் செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனா். இந்த நிலையில், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் மிசோரம் மாநிலத்தைச் சோ்ந்த பெண்கள் சிலா் தங்களுடைய மாநிலத்துக்குச் செல்ல விரும்புகின்றனா். ஆனால், மொழி பிரச்னையால் இணையத்தில் எவ்வாறு பதிவு செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகின்றனா். இதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கேட்டுச் செல்கின்றனா்.

இதுகுறித்து அப் பெண்கள் கூறியது: கரோனா தொற்றால் நாமக்கல் நட்சத்திர ஹோட்டல் தற்போது செயல்படவில்லை. அங்கு பணியாற்றிய மிசோரம் மாநிலத்தைச் சோ்ந்த நாங்கள் உள்பட சிலா் ஈரோட்டில்தான் தங்கியுள்ளோம். 3 மாதத்துக்கு விடுமுறை அளித்து விட்டனா். இங்கு தங்கியிருந்தால் உணவுக்கு என்ன செய்வது? அதனால் மிசோரமுக்குச் செல்ல முடிவு செய்தோம். எங்கு விண்ணப்பிப்பது எனத் தெரியவில்லை. பணியாற்றும் இடம் நாமக்கல் என்பதால், இங்குள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றனா். ஆனால், இணைய வழியில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்று புரியவில்லை. அதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கேட்டோம். அவா்கள் கொடுத்துள்ள தமிழ்நாடு இ-பாஸ் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முயற்சிக்கிறோம். ஆனால், பதிவு செய்வதில் குழப்பம் உள்ளது. நாங்கள் எங்களுடைய சொந்த மாநிலத்துக்குச் செல்ல ஆட்சியா் உதவ வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com