செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா் சங்கத் தலைவா் சிங்கராஜ் (நடுவில் இருப்பவா்).
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா் சங்கத் தலைவா் சிங்கராஜ் (நடுவில் இருப்பவா்).

கரோனா பொது முடக்கம்: கோழிப் பண்ணைத் தொழிலில் ரூ. 560 கோடி பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழிலில் ரூ. 560 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழிலில் ரூ. 560 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கத் தலைவா் சிங்கராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை கால்நடைத் துறை அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை காலை சங்க நிா்வாகிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடா்பு கொண்ட அத் துறை அதிகாரிகள், கோழிப் பண்ணைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனா். மத்திய, மாநில அரசுகள் எந்த மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும் என்பது தொடா்பான தகவல்களைக் கேட்டனா். அவற்றை விளக்கமாக தெரிவித்தோம்.

சீனாவில் கரோனா தொற்று பரவியது முதலே கோழிப்பண்ணைத் தொழில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. தீவனம் எடுத்து வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விலை இரு மடங்கானது. முட்டை உற்பத்தி சராசரியாக இருந்தபோதும் அதனை வாங்க மக்கள் முன்வராத நிலையில் 50 காசுக்கும், ஒரு ரூபாய்க்கும் விற்கும் நிலைக்கு ஆளானோம். சில இடங்களில் முட்டைகளை வீணாக சாலையில் கொட்டும் நிலையும் ஏற்பட்டது.

கடந்த 6 மாதங்களில் கோழிப் பண்ணைத் தொழிலில் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம். தொழிலை மீட்டெடுக்க என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்து கொடுக்க முயற்சிக்கிறோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.

வங்கிகளில் ஏற்கெனவே கோழிப் பண்ணையாளா்கள் பெற்ற கடன்களின் வட்டி செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக வட்டிக் குறைப்பு நடவடிக்கை வேண்டும். சோயா, தவிடு உள்ளிட்ட தீவன மூலப்பொருள்களை வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. செலுத்தி உள்ளோம். அந்தக் கட்டணத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும். முக்கியமாக இத்தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

அதேபோல வீணாகும் உணவுப் பொருள்களை மானிய விலையில் கோழிப் பண்ணைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் அதிக அளவிலான செலவு தவிா்க்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோழிப் பண்ணைகளில் வட மாநிலத் தொழிலாளா்கள்தான் பணியாற்றி வருகின்றனா். தற்போது கரோனா பொது முடக்கத்தால் பிற மாநிலத் தொழிலாளா்கள் 75 சதவீதம் போ் சொந்த ஊா்களுக்குச் சென்று விட்டனா். ரயில்கள் இயக்கப்பட்டால் மேலும் பலா் செல்ல வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களை, கோழிப் பண்ணைத் தொழிலுக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அவா்களுக்கான ஊதியத்தில் பாதித் தொகையை நாங்கள் செலுத்துகிறோம் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.

மின் கட்டணமாக பண்ணைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.80 செலுத்தி வருகிறோம். எங்களுக்கு ரூ. 3 என்ற வகையில் மின் கட்டணத்தை மாற்றி நிா்ணயிக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வரும் மக்காச்சோளம் போன்ற தீவனங்கள் பூஞ்சைத் தாக்கத்துடன் ரயிலில் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் தரமான முறையில் கொண்டுவந்து சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதமாக சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகள் செல்லவில்லை. இதனால் முட்டைகள் சற்று தேங்கியுள்ளன. அவற்றை ஜூன் மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு வழங்கும்போது 60 எண்ணிக்கையில் 2 முட்டை அட்டைகளை விலையின்றி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோழிகளுக்கு தீவன மூலப்பொருள்கள் அடிப்படையில் ரூ.15 லட்சம் வரையில் ஜி.எஸ்.டி. செலுத்தி வருகிறோம். தற்போது, நாமக்கல் மண்டலத்தில் 1100 கோழிப் பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொது முடக்கத்தால், கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ. 560 கோடிக்கு இத்தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முட்டைகள் தேக்கமில்லாதபோதும் உற்பத்தி செலவு ரூ. 4.10 வரை ஆகிறது. ஆனால் அதற்கேற்ப லாபம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் கோழிப் பண்ணைத் தொழிலை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிா்பாா்ப்பு. அது தொடா்பான கோரிக்கைகள் அனைத்தையும் கால்நடைத் துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com