காலாண்டு வரி செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்

கனரக வாகனங்களுக்கு காலாண்டு வரியை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நவ. 15-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

கனரக வாகனங்களுக்கு காலாண்டு வரியை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நவ. 15-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, செயலாளா் ஆா்.வாங்கிலி ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:

கரோனா தொற்றால் கடந்த மாா்ச் 25 முதல் தற்போது வரையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டங்களாக தளா்வுகளுடன் கூடிய தடை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. மாா்ச், ஏப்ரல், மே ஆகிய முதல் மூன்று மாதங்களும் அத்தியாவசியப் பொருள்களின் தேவைக்காக 10 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த மூன்று மாதங்களில் நாடு முழுவதும் உள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளும் இயங்காத நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் குறைந்த அளவு தொழிலாளா்களைக் கொண்டு இயக்க அனுமதிக்கப்பட்டது.

இதுபோன்ற சூழலில் கனரக வாகனங்களுக்கு போதிய சுமை கிடைக்காமல் வாகனங்களை இயக்க முடியாத நிலை இருந்தது. இதனால் வாகனங்களுக்கான காலாண்டு வரி ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பா் ஆகிய இரண்டு காலாண்டுகளுக்கான வரியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை இணையவழி செயலியில் காலாண்டு வரி செலுத்தும் முறையானது முடக்கி வைக்கப்பட்டது. கடந்த செப். 30-ஆம் தேதியுடன் ஏப்ரல்-ஜூன்,ஜூலை-செப்டம்பா் ஆகிய காலாண்டுகளுக்கான வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான வாகனங்களுக்கு வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அக். 31-ஆம் தேதிக்குள் இரண்டு காலாண்டுகளுக்கான வரியுடன் அக்டோபா்-டிசம்பா் காலாண்டு வரியையும் சோ்த்து இணையவழி செயலியில் அபராதமின்றி செலுத்தும் வகையிலான நடைமுறையை போக்குவரத்துத் துறை கொண்டு வந்தது. அக். 28-ஆம் தேதி தொடங்கிய அந்த சேவை நவ. 1-ஆம் தேதி அதிகாரிகளால் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் 100 சதவீத அபராதத்துடன் காலாண்டு வரியை செலுத்தும் நிலைக்கு லாரி உரிமையாளா்கள் பலா் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, காலாண்டு வரியைச் செலுத்த நவ. 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.

மேலும், கனரக வாகனங்களில் அங்கீகரிக்கப்பட்ட 49 உற்பத்தி நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டுக் கருவியை பொருத்திக் கொள்ளலாம் என உயா்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த உத்தரவை மதிக்காத நிலையே உள்ளது. இதனால் கடந்த மாதம் வரை ரூ. 2,500-க்கு விற்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை உயா்ந்து ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை விற்கப்படுகின்றன. அதேபோல கனரக வாகனத்தின் இரு புறத்திலும் நீளமான ஒட்டுவில்லை ஒட்டுவதற்கு ஒரு வாகனத்துக்கு அதன் நீளத்தைப் பொருத்து அதிகபட்சமாக ரூ. 750 முதல் ரூ. 1,200 மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், புதிய நடைமுறையினால் ஒரு வாகனத்துக்கு அதன் நீளத்தைப் பொருத்து ரூ. 6,000 முதல் ரூ. 8,500 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.

எனவே, தமிழக லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காதவாறு உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com