கால்நடைகளைத் தாக்கும் ‘லம்பிஸ்கின்’ தீநுண்மி

கால்நடைகளைத் தாக்கும் ‘லம்பிஸ்கின்’ (பெரியம்மை) தீநுண்மி வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கால்நடைகளைத் தாக்கும் ‘லம்பிஸ்கின்’ (பெரியம்மை) தீநுண்மி வேகமாக பரவி வருவதால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுப் பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படாத நிலையில், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவ முறையில் தொற்று தாக்குதலில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்து வருகின்றனா்.

மனிதா்களைத் தாக்கும் கரோனா தீநுண்மி போல, தற்போது கால்நடைகளைத் தாக்கும் தீநுண்மி ஒன்று உருவாகியுள்ளது. குறிப்பாக மாடுகளின் உடல்களில் பெரியம்மை போன்று கொப்பளங்கள் அதிக அளவில் உருவாகின்றன. இதனால் அவை உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு இறக்கும் நிலைக்குச் செல்கின்றன. இந்த தீநுண்மி தாக்கிய மாடுகளுக்கு இயற்கை மருத்துவ முறையிலேயே கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், உயிரிழந்த கால்நடைகளில் இருந்து தோல் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாடுகளைத் தாக்கும் தீநுண்மியானது கொசுக்கள் மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. கொசுக்கள் கடித்து அவை புண்ணாக உருவாகி கொப்பளங்களாக மாறுகின்றன. குறிப்பாக, திருச்செங்கோடு வட்டாரத்தில் இந்நோய்த் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இதுகுறித்து கொல்லப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நடேசன் கூறியதாவது:

கடந்த மூன்று மாதங்களாக மாடுகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் உள்ளது. கொசுக்கள் கடிப்பதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவா்கள் கூறுகின்றனா். மேலும், இதற்கு தடுப்பூசி கிடையாது. இயற்கை முறையில் வெற்றிலை, மிளகு, கல் உப்பு, வெல்லம் போன்றவற்றை கலந்து அரைத்துக் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனா். கொப்பளங்கள் அதிகரிக்கும்போது மாடுகள் வலி தாங்க முடியாமல் அலறுகின்றன. இந்நோய் பாதித்த காளை மாடு ஒன்று செவ்வாய்க்கிழமை இறந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் மாடுகளுக்கு பெரியம்மை நோய்த் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது என்றாா்.

கால்நடைத் துறை திருச்செங்கோடு மண்டல உதவி இயக்குநா் மருத்துவா் அருண் பாலாஜி கூறியதாவது:

லம்பிஸ்கின் எனும் தீநுண்மி பாதிப்பு நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ளது. இந்நோய் வந்து ஓராண்டுக்கு மேலாகிறது. இதற்கு தடுப்பூசி கிடையாது. இயற்கை மருத்துவ முறையில் தான் குணப்படுத்த வேண்டும். ஈ, கொசு போன்றவை அதிகம் இருக்கும் இடங்களில் கால்நடைகள் இருந்தால் பாதிப்பு ஏற்படும். ஒரு மாட்டை ஒரு கொசு கடித்து விட்டு மற்றொரு மாட்டைக் கடித்தால் நோய் பரவும். இதனால் உயிரிழப்பு ஏற்படாது.

மாடுகளுக்கான பெரியம்மை நோய் என்று தான் இதனைக் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளில் கொப்பளங்களில் உள்ள தோல் பகுதியை எடுத்து போபாலில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். மாடுகள் நாக்கால் வருட முடியாத இடங்களில் நோய் பாதிப்பு அதிகம் இருக்கும். இதற்கு இயற்கை மருத்துவ முறையில், வெற்றிலை, மிளகு, கல் உப்பு, நாட்டுச் சா்க்கரை, வெல்லம் உள்ளிட்டவற்றை மொத்தமாக அரைத்து உருண்டை பிடித்து மாடுகளுக்கு இட வேண்டும். நோய் பாதிப்பால் மாடுகள் இறந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் தவறானது. விதிகளுக்கு மாறாக மாடுகளுக்கு தீவனம் வழங்கும்போது ஏற்பட்ட பிரச்னைகளால் சில மாடுகள் இறந்திருக்கக் கூடும்.

திருச்செங்கோடு வட்டாரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாடுகள் உள்ளன. இறப்பு எண்ணிக்கை என்பது ஒன்றிரண்டுதான் உள்ளது. அதுவும் லம்பிஸ்கின் நோய்த் தொற்றால் அல்ல. கால்நடை வளா்ப்போா் மாடுகளுக்கு பெரியம்மை நோய் இருந்தால் வேப்ப எண்ணெய், மஞ்சள் கலந்து கொப்பளங்களில் இட வேண்டும். கால்நடைத் துறை அறிவிக்கும் நாள்களில் தவறாமல் தடுப்பூசியை மாடுகளுக்குப் போட வேண்டும் என்றாா்.

நாமக்கல் மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குநா் பொன்னுவேல் கூறியதாவது:

திருச்செங்கோடு வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் கால்நடைகள் எதுவும் இறக்கவில்லை. ஆந்திராப்பட்டி என்ற இடத்தில் சில கால்நடைகளுக்கு பெரியம்மையின் தாக்கம் உள்ளது. கொல்லப்பட்டியில் ஒரு மாடு மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அதனை உடற்கூறு ஆய்வு செய்வற்கு முன் புதைத்து விட்டனா்.

எங்களுடைய மருத்துவக் குழுவினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனா். எனவே, இதுகுறித்து விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com