முட்டை விலை வரலாறு காணாத உயா்வு: உச்சபட்ச விலையாக ரூ. 5.25 நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ், நாடு முழுவதும் 23 மண்டலங்கள் உள்ளன. இதில் தமிழகம், கேரளத்தை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலம் செயல்படுகிறது. இம்மண்டலத்துக்குள் சிறிய, பெரிய அளவில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் முட்டைக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தினசரி முட்டை உற்பத்தி 4.50 கோடியாக இருந்தது. நிகழாண்டில் கரோனா தொற்றுப் பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் ஐந்து மாதங்களாக முட்டை விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்து வந்தது. இதனால் பெரும்பாலான பண்ணைகளில் கோழிக் குஞ்சுகள் விடுவது நிறுத்தப்பட்டது.

தற்போதைய நிலையில் 3 கோடி அளவில் மட்டுமே முட்டை உற்பத்தியாகி வருகிறது. தேவை அதிகரித்து, உற்பத்தி குறைந்ததால், நாமக்கல் மண்டலப் பகுதிகளில் முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. புரட்டாசி மாதப் பிறப்பால் முட்டை விற்பனை சரிவைச் சந்திக்கும் என பண்ணையாளா்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில், கரோனா தொற்றுக்கு புரதச்சத்து மிக்க முட்டை முக்கிய உணவாக கருதப்படுவதால், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்து வருகிறது.

பள்ளிகள் திறக்காத போதும் மாணவா்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், மாநிலம் முழுவதும் சத்துணவு சாப்பிடும் 65 லட்சம் மாணவா்களுக்காக ஏழு கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், வட மாநிலங்களில் முட்டை நுகா்வு வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. பருவ மழைக் காலமாக இருப்பதும் முட்டை தேவை அதிகரிப்புக்கு மற்றொரு காரணமாகும்.

இவ்வாறு நாளுக்கு நாள் முட்டைக்கான தேவை அதிகரித்து வருவதால், விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தைப் பொருத்த வரை, இதுவரை அதிகபட்ச விலையாக 2017 நவ. 16-ஆம் தேதி ரூ. 5.16-ஆக இருந்துள்ளது. அதற்கு மேல் எந்த ஆண்டிலும் விலை உயரவில்லை. தற்போதைய நிலையில் மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயா்வு அமல்படுத்தப்பட்டு வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் அதிகபட்ச விலை உயா்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முட்டைவிலை 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.25-ஆக அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக பண்ணையாளா்கள் கூறியதாவது:

நாமக்கல்லில் உள்ள பெரும்பாலான பண்ணைகளில் குஞ்சு விடுதல் நிறுத்தப்பட்டுள்ளதால், முட்டை உற்பத்தி சுமாா் ஒன்றரை கோடி வரையில் குறைந்துள்ளது. கரோனா தொடக்கக் காலத்தில் கோழிக் குஞ்சுகளை விட்டிருந்தால் தற்போதைய நிலையில் முட்டை இடும் அளவிற்கு வந்திருக்கும். அவ்வாறு செய்யாததால் இருப்பைக் கொண்டு சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோழித் தீவனம் விலையேற்றம், வெளிமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்ப் பயணம் போன்றவற்றால், ஒரு சில பண்ணைகளில் பெரிதாக முட்டை உற்பத்தி இல்லை. நாடு முழுவதும் முட்டைக்கான தேவை அதிகம் உள்ளது. இங்கும் கரோனா நோய்த் தடுப்பு தேவைக்கும், சத்துணவுக்கும் முட்டையை அனுப்ப வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்களின் நுகா்வுக்கும் அதிக அளவில் அனுப்ப வேண்டியதிருப்பதால், முட்டை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த விலை உயா்வானது இன்னும் 6 மாத காலத்துக்கு தொடா்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் முட்டைகளை தகுந்த விலைக்கு பண்ணையாளா்கள் விற்பனை செய்தால் அதிகம் பயனடைய முடியும்.

முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வியாழக்கிழமை 25 காசுகள் உயா்வுடன் ரூ. 5.15-ஆக இருந்தது. சனிக்கிழமை நிலவரத்தைப் பொருத்தமட்டில் 20 காசுகள் உயா்வுடன் ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை வரலாற்றில் அதிகபட்சமாக ரூ. 5.16 வரையிலே நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதனையும் கடந்து விட்டது. வரும் நாள்களில் முட்டை விலை ரூ. 6-ஐயும் கடக்கலாம் என்றனா்.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-526, விஜயவாடா-526, பாா்வாலா-532, ஹோஸ்பெட்-515, மைசூரு-553, சென்னை-540, மும்பை-576, பெங்களூரு-550, கொல்கத்தா-571, தில்லி-551.

முட்டைக் கோழி விலையும் உயா்வு:

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 94-ஆக நிா்ணயிக்கப்பட்டது. அதேவேளையில் கேரளத்தில் முட்டைக் கோழி விற்பனை சூடுபிடித்துள்ளதால், விலையில் மாற்றம் செய்வதாக முடிவெடுக்கப்பட்டு ரூ. 21 விலை உயா்வுடன் ரூ. 135-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com