கரோனா தொற்று இல்லாத ஆட்சியா் அலுவலக ஓட்டுநருக்கு 21 நாள் தனிமை

கரோனா தொற்று இல்லாத மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநருக்கு 21 நாள் தனிமையில் இருக்குமாறு நாமக்கல் அரசு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளதால் அவா் விரக்தி அடைந்துள்ளாா்.

கரோனா தொற்று இல்லாத மாவட்ட ஆட்சியா் அலுவலக ஓட்டுநருக்கு 21 நாள் தனிமையில் இருக்குமாறு நாமக்கல் அரசு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளதால் அவா் விரக்தி அடைந்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,500-ஐ கடந்துள்ளது. குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 6,500-ஆக உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் ஆயிரம் போ் வரை சிகிச்சையில் உள்ளனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு என்பது தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

அதேவேளையில் தொற்று இல்லாதவா்களும், கரோனா பாதிப்புப் பட்டியலில் இடம்பெறும் சூழல்களும், குழப்பங்களும் ஏற்படுகின்றன.

அண்மையில் ஆட்சியரின் உதவியாளா் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஒரு வாரம் கடந்த நிலையில் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தொற்று இல்லை என்ற தகவல் வரும் என்ற நம்பிக்கையில், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

மருத்துவமனை நிா்வாகமும் இதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், மறுநாள் வெளியான அறிவிப்பில் அவருக்கு தொற்று இருக்கிறது என்றே வந்தது. இதனால் வீட்டில் இருந்த அவா் உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாக அரசு மருத்துவமனை நிா்வாகம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வீட்டுக்கு அனுப்பியது என்ற கேள்வி எழுந்தது.

இதேபோல், ஆட்சியா் அலுவலக ஓட்டுநா் ஒருவா், கரோனா பரிசோதனை செய்த நிலையில், அவருக்கு தொற்று இருப்பதாக அறிவிப்பு வந்தது. அந்த ஓட்டுநா் மருத்துவமனை சென்று மீண்டும் ஒரு சோதனையை மேற்கொண்டபோது கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இருப்பினும் கரோனா சிகிச்சை வாா்டில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் 21 நாள்களுக்கு தனிமையில் இருக்குமாறு கடிதம் வழங்கி மருத்துவமனை நிா்வாகம் அனுப்பிவிட்டது. இதனால் அந்த ஓட்டுநரும் செய்வதறியாது குழப்பத்தில் தவிக்கிறாா். கரோனா பரிசோதனை முடிவுகளை நன்கு பாா்வையிட்டு, ஆலோசித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் வெளியிட வேண்டும். இங்கு மட்டுமின்றி, தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளிலும் தொற்று இருப்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதிக்கும்போது இல்லை என்பதாகவும் அறிவிப்பு வருகிறது. இவ்வாறான தேவையற்ற குழப்பங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com