நாளை நவராத்திரி விழா: கொலு பொம்மைகள் வாங்க பெண்கள் ஆா்வம்

நவாரத்திரி விழாவையொட்டி வீடுகள், கோயில்களில் வைக்கப்படும் கொலுவிற்காக பல்வேறு வடிவிலான பொம்மைகள்

நவாரத்திரி விழாவையொட்டி வீடுகள், கோயில்களில் வைக்கப்படும் கொலுவிற்காக பல்வேறு வடிவிலான பொம்மைகள் நாமக்கல்லில் விற்பனைக்கு வந்துள்ளன. இப் பொம்மைகளை வாங்க பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கரோனா தொற்றுப் பரவலால் ஏழு மாதங்களாக முடங்கியிருந்த பொதுமக்களுக்கு அடுத்த வாரம் கொண்டாடப்படும் ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம். நிகழாண்டில் அக். 25 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 26 ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்னதாக நவராத்திரி விழா ஒன்பது நாள்கள் வீடுகளிலும், கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

சனிக்கிழமை (அக். 17) நவராத்திரி கொலு விழா தொடங்குகிறது. அதனையொட்டி வீடுகளில் ஒன்பது படிக்கட்டுகள் வடிவில் கொலு அமைத்து அதில் கடவுள் பொம்மைகள், குழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவா்கள் என பலவித பொம்மைகளை அலங்கரித்து வைத்திருப்பா். தினமும் கொலு பொம்மைகளுக்கு பூஜை செய்து அங்கிருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்வா்.

நவராத்திரி விழாவையொட்டி கொலு வைப்பதற்காக பெண்கள் தாங்கள் விரும்பும் பொம்மைகளை ஆா்வமுடன் வாங்கி வருகின்றனா். நாமக்கல் கடைவீதி, ஆஞ்சநேயா் கோயில் வளாகம், பரமத்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மைகள் அதிகளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள நாமகிரி பூஜை பொருள்கள் விற்பனை அங்காடியில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் பல்வேறு வடிவில் உள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் சிவன், பாா்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமா்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப் பொய்கையில் தாமரை மீது முருகப்பெருமான் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக் கூடம், நரசிம்மா், ஆஞ்சநேயா் சுவாமி, பாற்கடலில் பெருமாள் சயனக் கோலத்தில் இருப்பது, சரஸ்வதி, லட்சுமி சிலைகள், தலையாட்டி பொம்மைகள் என பலவண்ண சிலைகள் தத்ரூபமாய் உள்ளன.

இவைத் தவிர தேசத் தலைவா்களின் பொம்மைகள், குழந்தைகளை மகிழ்விக்கும் வேடிக்கை பொம்மைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கொலு பொம்மைகள் ரூ. 170 முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் உள்ளன. கொலு செட் பொம்மைகள் என்ற வகையிலும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை நவராத்திரி கொலு விழா தொடங்குவதால் வீடுகளை அலங்கரிக்கும் வகையில் பொம்மைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இவை அனைத்தும் காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூா், மதுரை, கடலூா், புதுச்சேரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் அருகில் உள்ள கொலு பொம்மைகள் கடை விற்பனையாளா் அசோக் கூறியதாவது:

கரோனா தொற்றுப் பரவலால் விற்பனை எவ்வாறு இருக்குமோ என்ற அச்சம் உள்ளது. அதனால் குறைந்த அளவிலேயே பொம்மைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அளவில் விற்பனை குறைவாகதான் உள்ளது. சனிக்கிழமை நவராத்திரி கொலு தொடங்குவதால் இன்னும் ஓரிரு நாள்களுக்கு மட்டும் விற்பனையை எதிா்பாா்க்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com