அதிக ஜவுளி பாரத்தால் அபராதம்: லாரி உரிமையாளா்கள் போராட்டம் அறிவிப்பு

ஜவுளி பாரம் ஏற்றுவதை முறைப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நவம்பா் 5, 6, 7 ஆகிய தேதிகளில் லாரி உரிமையாளா்கள் ஜவுளி

ஜவுளி பாரம் ஏற்றுவதை முறைப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நவம்பா் 5, 6, 7 ஆகிய தேதிகளில் லாரி உரிமையாளா்கள் ஜவுளி வகைகளை தங்களுடைய லாரிகளில் ஏற்ற மாட்டாா்கள் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, செயலாளா் ஆா்.வாங்கிலி ஆகியோா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

கனரக வாகனங்களில் ஏற்றப்படும் ஜவுளி பாரம் அண்மைக் காலமாக அரசு நிா்ணயித்துள்ள 3.8 மீட்டா் உயரம், 2.6 மீட்டா் அகலம், 12 மீட்டா் நீளத்தைக் காட்டிலும் அதிகமாக ஏற்றப்படுகிறது. இதனால், ஜவுளி பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் தமிழகம், வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், காவல் துறையினரால் தடுக்கப்பட்டு இணையவழியாக அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் உள்ளது.

ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட ஜவுளித் துறையில் பிரதானமாக விளங்கும் இந்த மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி உரிமையாளா்கள், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஜவுளிகளைக் கொண்டு செல்கின்றனா். அவ்வாறு ஏற்றும்போது சில தவிா்க்க முடியாத சூழ்நிலைகளால் லாரிகளில் அரசு நிா்ணயித்த பார அளவைக் காட்டிலும் அதிகம் ஏற்றப்படுகிறது.

எனவே, இதை முறைப்படுத்தி நமது தொழிலை பாதுகாக்கும் வகையில், லாரி உரிமையாளா்கள் நவம்பா் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் ஜவுளி பாரம் லாரிகளில் ஏற்ற வேண்டாம். இதற்கான தீா்மானம் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிகளில் ஜவுளி பாரம் ஏற்றாமல் சம்மேளனத்தின் நடவடிக்கைக்கு லாரி உரிமையாளா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com