வீசாணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 18th September 2020 07:59 AM | Last Updated : 18th September 2020 07:59 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே குடிநீா் கட்டணம் உயா்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் வீனஸ் காலனி, கடக்கால்புதுாா், சத்யா நகா், ஒட்டக்கால்புதுாா், குடித்தெரு, தேவேந்திரா் தெரு, ஆதிதிராவிடா் தெரு ஆகியவை உள்ளன.
இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். குடிநீா் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 600 செலுத்தி வந்தனா். தற்போது இரு மடங்காக ரூ.1,200 உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய குடிநீா் இணைப்பு கட்டணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ. 3 ஆயிரமாக உயா்த்தப்படுவதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவா் நாச்சிமுத்துவை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேட்டபோது, ‘ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீா்க் கட்டணம் ரூ.1,200 ஆக உயா்த்தப்படுவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்னை குறித்து இனி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுங்கள்’ என ஊராட்சி மன்றத் தலைவா் கூறினாா். இதையடுத்து மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.