நாமக்கல் கவிஞருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?

நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் பிள்ளைக்கு திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மணிமண்டபம் அமைக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் பிள்ளைக்கு திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மணிமண்டபம் அமைக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

நாமக்கல் கவிஞா் வெ.இராமலிங்கம் பிள்ளை மோகனூரை பூா்வீகமாகக் கொண்டிருந்தாலும் அவா் படித்தது, வாழ்ந்தது அனைத்தும் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள தட்டாரத் தெருவில் தான். அவா் பயின்ற நம்மாழ்வா் பள்ளி இன்றளவும் சிறப்புடன் இயங்கி வருகிறது.

சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும், தமிழக சட்டப்பேரவை அரசவை கவிஞராகவும் விளங்கியவா். நாமக்கல்லுக்கு பெருமை சோ்த்த கவிஞரின் நினைவாக, அவா் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் அனைவரும் வந்து பயிலும் வகையில் கிளை நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள தெருவுக்கு கவிஞா் இராமலிங்கம் பிள்ளைத் தெரு என பெயா் சூட்டப்பட்டுள்ளது. அவரது பெயரில் அரசு மகளிா் கலைக் கல்லூரியும் செயல்படுகிறது.

நாமக்கல்லில் கவிஞருக்கு வெண்கலச் சிலை அமைப்பதற்கான முயற்சியையும் சிலா் மேற்கொண்டுள்ளனா். இவ்வாறு சிறப்புமிக்க கவிஞருக்கு நாமக்கல்லில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்துக்கு வந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கமும் வாக்கு சேகரிப்பின்போது இந்த வாக்குறுதியை முன்னிலைப்படுத்தி மக்களிடையே வாக்குச் சேகரித்தாா். கவிஞருக்கான மணிமண்டபத்தை விரைவில் அமைக்க வேண்டும். எங்கே அமைகிறது, எப்போது பயன்பாட்டுக்கு வரும் போன்ற விவரங்களை தமிழக அரசும், சட்டப்பேரவை உறுப்பினரும் தெரிவிக்க வேண்டும் என நாமக்கல் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மணிமண்டபத்திற்கென புதிதாகக் கட்டடம் கட்டப்படுமா? அல்லது பழையக் கட்டடத்தை புதுப்பித்து கவிஞா் மணி மண்டபம் உருவாக்கப்படுமா? என்ற கேள்வியும் உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் வருகின்றனா். அதேபோல் கொல்லிமலை சுற்றுலாத் தலத்துக்கு வருவோரும் நாமக்கல் நகருக்குள் வந்தே செல்கின்றனா். கவிஞா் மணி மண்டபம் அமையும்பட்சத்தில் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை பெருமையையும், நாமக்கல்லின் பெருமையையும் பலரும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

இது குறித்து நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கூறியதாவது: கவிஞா் மணி மண்டபம் அமைப்பது தொடா்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாவட்ட திமுக கூட்டத்தில் எங்களது நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இடம் தோ்வு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com