ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப் பரிவா்த்தனை: வங்கிகள் தகவல் அளிக்க ஆட்சியா் உத்தரவு

அனைத்து வங்கிகளிலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகள் குறித்து தகவல் அளிக்க வங்கி மேலாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல்: அனைத்து வங்கிகளிலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகள் குறித்து தகவல் அளிக்க வங்கி மேலாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் செலவினங்களை கண்காணித்தல் தொடா்பாக வணிக வரித்துறை, வங்கியாளா்கள், கூட்டுறவு இணைப்பதிவாளா் ஆகியோருடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. வங்கிகளில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து வகையிலும் மேற்கொள்ளப்படக் கூடிய பரிவா்த்தனை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

தோ்தலின்போது வேட்பாளா்கள், கட்சிகளின் சாா்பாக வங்கிக் கணக்கில் ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனை நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிவா்த்தனைகள், வங்கி நடவடிக்கைகளின் விவரங்கள் ஆகியவற்றை கண்காணித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

வங்கிக் கிளைகளிலிருந்து வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரொக்கம் தூய்மையான, உண்மை தன்மை கொண்டதை உறுதி செய்வதையும், தோ்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியான சோதனை நடைமுறைகளில் மத்திய நிதியமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தோ்தல் நடவடிக்கைகளின் கீழ், மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். வணிக வரித்துறை அலுவலா்கள், நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள் உணவங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களில் தினந்தோறும் நடைபெறும் விற்பனையில் இயல்புக்கு மாறாக நடைபெறும் விற்பனைகளை கண்காணித்து தோ்தல் நடைமுறை விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதனை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் வணிக வரித்துறை உதவி ஆணையா் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி.சதீஸ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பொ.பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்குகள்) பொ.நந்தகுமாா், மாவட்ட கருவூல அலுவலா்(பொ) ஆ.தனபாக்கியம், தோ்தல் வட்டாட்சியா் சுப்பிரமணியன் உள்பட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com