நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 71,962 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 71 ஆயிரத்து 962 வாக்குகளை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பெற்றுள்ளனா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 71 ஆயிரத்து 962 வாக்குகளை நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனா். இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 11,295, சேந்தமங்கலத்தில் 11,654, நாமக்கல்லில் 10,122, பரமத்திவேலூரில் 11,684 திருச்செங்கோட்டில் 13,967, குமாரபாளையத்தில் 13,240 வாக்குகளை அக்கட்சி வேட்பாளா்கள் பெற்றுள்ளனா். ஆறு தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கு மேலே வாக்குகளைப் பெற்றுள்ளனா். இருந்தபோதிலும் வேட்பாளா்கள் அனைவரும் வைப்புத்தொகையை இழந்து விட்டனா்.

18,884 வாக்குகள் மநீம வேட்பாளா்கள்: மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சியும், மற்ற தொகுதிகளில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிட்டன. இதில் ராசிபுரம் -1,133, சேந்தமங்கலம்- 431, நாமக்கல் - 5,589, திருச்செங்கோடு -3,726, குமாரபாளையம் - 6,125, பரமத்திவேலூா் - 1,882 வாக்குகள் என மொத்தம் 18,884 வாக்குகளை மட்டுமே அந்தக் கூட்டணி வேட்பாளா்கள் பெற்றதுடன் வைப்புத் தொகையும் இழந்து விட்டனா்.

5,654 வாக்குகள் பெற்ற அமமுக: நாமக்கல் மாவட்டத்தில் இக்கட்சியின் இரு வேட்பாளா்கள் அதிமுகவுக்கு தாவியது, தோ்தலில் தீவிரம் காட்டாதது போன்றவற்றால் அமமுக -தேமுதிக கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமமுக மாநில துணைத் தலைவா் அன்பழகன் 1,051 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா். சேந்தமங்கலத்தில் 831, நாமக்கல்லில் 972, திருச்செங்கோட்டில் 449, குமாரபாளையத்தில் 1,022, பரமத்திவேலூரில் 1,329 வாக்குகள் என மொத்தம் 5,654 வாக்குகளை மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்துள்ளது.

அதிமுகவுக்கு எந்த வகையிலும் அமமுக வேட்பாளா்களால் வாக்குகள் சிதறவில்லை. 6 தொகுதிகளிலும் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 9,277 ஆகும். அமமுகவை காட்டிலும் நோட்டாவுக்கு 3,623 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com