சுகாதாரத் துறை ஊழியருக்கு கரோனா தொற்று: ஆட்சியா் அலுவலகத்தில் மருந்து தெளிப்பு பணி

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதை அடுத்து அங்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் நின்ற முதியோா்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் நின்ற முதியோா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதை அடுத்து அங்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கிய கரோனா தொற்றின் தாக்கம், 2021 ஜனவரியில் சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

கடந்த ஒரு வாரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பிப்ரவரி மாதம் 2 எண்ணிக்கையில் குறைந்த தொற்று, தற்போது தினசரி 30, 40 என்ற வகையில் சென்று கொண்டிருக்கிறது.

50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: நோய்த் தொற்றைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

முதியோா், பெண்கள், 45 வயதுக்கும் மேற்பட்டோா் கோவிஷீல்டு, கோவேக்ஸின் போன்ற தடுப்பூசிகளை இரண்டு தவணையாகக் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

அலுவலகங்களில் நேரடி முகாம்:

ஏப்.11 முதல் ஒரே இடத்தில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு நேரடியாக அங்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இது தொடா்பான தகவல்களை சுகாதாரத் துறைக்கு அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடுப்பூசி செலுத்த விரும்புவோா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆதாா் அட்டையைப் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 200-க்கும் மேற்பட்டோா் செலுத்திக் கொள்கின்றனா்.

கரோனா நோய் பாதுகாப்பு மையம்:

கரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதால், அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், வீடுகளில் தங்கியிருந்து 70 போ் வரை சிகிச்சை பெற்று வருகின்றனா். எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்தியதுபோல் நோய் பாதுகாப்பு மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி ஆகியவை தோ்வு செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பயன்பாட்டுக்கு அவை கொண்டுவரப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சுகாதாரத் துறை ஊழியருக்கு கரோனா: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தின் இணை கட்டடத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் அலுவலக உதவியாளா் ஒருவருக்கு வியாழக்கிழமை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் நகராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

முகக்கவச அலட்சியத்தால் பாதிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சாந்தாஅருள்மொழி கூறியதாவது:

கரோனா தொற்றுப் பற்றிய அச்சம் தற்போது பொதுமக்களிடத்தில் இல்லை. இதனால் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி நடமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். கரோனா தொற்று பரவல் சில நாள்களாக அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது அவசியம், அலட்சியம் வேண்டாம். நோய்த் தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்ட வேண்டும். தற்போது வரையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தங்கியிருந்து கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா்.

எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் ஒரு வாரத்திற்கு தங்கி சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com