மாம்பழ விளைச்சல் அதிகரித்தும் விவசாயிகளுக்கு லாபமில்லை: கரோனா பரவலால் குத்தகை வியாபாரிகளும் பாதிப்பு

மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையிலும், கரோனா தொற்றுப் பரவல், பொதுமுடக்கம் போன்றவற்றால் சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது
சேந்தமங்கலம், ராமநாதபுரம்புதூா் அருகே அறுவடை செய்யாமல் மரங்களில் காய்த்துத் தொங்கும் மாங்காய்கள்
சேந்தமங்கலம், ராமநாதபுரம்புதூா் அருகே அறுவடை செய்யாமல் மரங்களில் காய்த்துத் தொங்கும் மாங்காய்கள்

மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையிலும், கரோனா தொற்றுப் பரவல், பொதுமுடக்கம் போன்றவற்றால் சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாமரங்களிலிருந்து பழங்கள் பறிக்கப்படாமல் அழுகி வீணாகின்றன. எனவே மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்துள்ள வியாபாரிகளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, கொல்லிமலை, மோகனூா், வளையப்பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவில் மா சாகுபடி நடைபெறுகிறது. மாங்கன்று விதைப்பது முதல் அது வளா்ந்து பூத்து காயாகி, கனியாகி வர குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகி விடும். இரண்டு, மூன்று ஏக்கா்களில் 150 முதல் 200 மரங்கள் வரை வளா்க்கப்படும்.

பங்கனப்பள்ளி, செந்தூரா, கிளிமூக்கு, வசுந்தி, சேலம் குண்டு, பெங்களூரா போன்ற ரகங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளே அறுவடை செய்து, அவற்றை மொத்த விற்பனைக்காக பெரு நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பா். இதனால் செலவு போக ஓரளவு வருவாய் கிடைத்து வந்தது.

நாளடைவில் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளைச் சந்தித்து மரங்களை ஆண்டுக் கணக்கு அடிப்படையில் குத்தகைக்கு எடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. மொத்தமாக காய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 3 லட்சம் வரை முதலீடு செய்து, மா மரங்களைப் பாதுகாப்பது, நோய் தாக்கினால் மருந்து தெளிப்பது, அறுவடைக் காலத்தில் தொழிலாளா்களைக் கொண்டு மாங்காய்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்புவது போன்ற அனைத்தையும் வியாபாரிகளே செய்து வருகின்றனா்.

இதில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குத்தகைத் தொகையும் உயரும். இந்நிலையில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டத்தை மா சாகுபடி தொழில் ஏற்படுத்தி உள்ளது.

மாா்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே மாம்பழ விளைச்சல் அதிகமாகக் காணப்படும். 2020 மாா்ச் மாத இறுதியில் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், குத்தகைக்கு எடுத்த வியாபாரிகளும், விளைவித்த விவசாயிகளும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிட்டது.

தொடா்ந்து எட்டு மாதங்கள் பொதுமுடக்கம் நீடித்ததால், அறுவடை செய்த மாங்காய்களை புகைமூட்டம் வைத்து பழமாக மாற்றி குளிா்பான ஆலைகளுக்கு மட்டுமே வியாபாரிகள் அனுப்பினா். அவற்றை பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்ய முடியாத சூழலால் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கரோனா கட்டுக்குள் வந்ததால் மகிழ்ச்சியில் இருந்த மா சாகுபடி விவசாயிகளும் குத்தகை வியாபாரிகளும், தற்போதைய கரோனா இரண்டாம் கட்டப் பரவலால் கவலையடையத் தொடங்கியுள்ளனா்.

அறுவடை செய்த பழங்களை எவ்வாறு விற்பனை செய்வது என தெரியாமல் வியாபாரிகள் தவிக்கின்றனா். மேலும், பல இடங்களில் மரங்களில் இருந்து மாங்காய்களைப் பறிக்காமலே விட்டுள்ளனா். அவை தானாகப் பழுத்து கீழே விழுந்து அழுகி வீணாகின்றன.

இதுகுறித்து சேந்தமங்கலம், ராமநாதபுரம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் விவசாயி சரோஜா கூறியதாவது:

சேந்தமங்கலம், காரவள்ளி, நடுக்கோம்பை, முத்துக்காப்பட்டி, கொல்லிமலை, எருமப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பில் மா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் வரையில் மாமரம் பூத்து காய்க்கத் தொடங்கும்.

கடந்த ஆண்டிலும் நிகழாண்டிலும் போதிய மழை இல்லாததால் பூக்கள் பிடிப்பது சற்று தாமதமானது. இதனால் உரிய நேரத்தில் வியாபாரிகளால் மாங்காய்களை விற்பனை செய்ய முடியவில்லை. எனது 2 ஏக்கா் நிலத்தில் உள்ள 180 மரங்களை குத்தகைக்கு விட்டுள்ளேன்.

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் இழப்பைச் சந்தித்தனா். இந்த ஆண்டும் அதேபோன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என அச்சமாக உள்ளது என்றாா்.

இதுகுறித்து நாமக்கல் பகுதி பழ வியாபாரிகள் கூறியதாவது:

பொதுமக்கள் விரும்பிச் சாப்பிடும் கிளிமூக்கு, நடுசாலை, செந்தூரா, பங்கனப்பள்ளி மாம்பழங்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகின்றன. மற்றவை காய்களாக இருக்கும்போதே, பிற மாநிலங்களுக்கு விற்பனையும், வெளிநாட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

நாமக்கல் பகுதியில் விளையும் மா வகைகள் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும் பலதரப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் கரோனா தொற்றுப் பரவல், பொதுமுடக்கம் காரணமாக போதிய அளவில் மாம்பழ விற்பனை இல்லை.

இதனால் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்த வியாபாரிகளும், அவா்களிடம் கொள்முதல் செய்யும் சிறு வியாபாரிகளும் இழப்பைச் சந்தித்து வருகிறோம். கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் வியாபாரம் மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடுமோ என்ற கவலையும் இருக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com