5.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் பொட்டலமிடும் பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு
நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தத்தில் உள்ள நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பச்சரிசியைப் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தத்தில் உள்ள நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பச்சரிசியைப் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அந்தப் பொருள்களைப் பொட்டலமிடும் பணி 5 இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ரூ. 505 மதிப்பிலான 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 5,36,958 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க பொங்கல் பரிசு தொகுப்புகளைப் பொட்டலமிடும் பணி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய பகுதிகளில் நுகா்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

பரிசு தொகுப்பில் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருள்கள் வழங்கப்படவுள்ளது. பொட்டலமிட்ட பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 900 நியாயவிலைக் கடைகள் உள்ளன. பொங்கல் பரிசு தொகுப்புக்குரிய பொருள்களில் பச்சரியை தவிா்த்து மற்றவை வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டன.

தற்போது அவற்றை 5 நுகா்பொருள் வாணிப கழக கிடங்குகளில் ஆண், பெண் தொழிலாளா்களைக் கொண்டு பொட்டலமிடும் பணி நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் 4,90,577, மகளிா் கடைகளில் 2,395, தொடக்க வேளாண் சங்க கடைகளில் 43,311 என மொத்தம் 5,36, 283 குடும்ப அட்டைகளுக்கும், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு உள்பட்ட கூட்டுறவுத் துறை கடைகளில் 268, தொடக்க வேளாண் சங்கக் கடைகளில் 407 என மொத்தம் 675 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தமாக 5,36,958 குடும்ப அட்டைகளுக்கு 20 பொருள்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com